தீபாவளி அன்று பஸ்ஸுக்குகூட காசு இல்லாமல் இருந்த ஒருவருக்கு சாலையில் கட்டுக்கட்டாக கிடைத்த பணத்தை எடுத்துச் செல்லாமல் அதை உரியவரிடம் கொடுத்த நேர்மைக்கு உதாரணமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சதாரா பகுதியைச் சேர்ந்தவர் தனஜி ஜெக்தலே. 54 வயதான இவர் வேலை சம்பந்தமாக தீபாவளி அன்று தாகிவாடி பகுதிக்குச் சென்றுள்ளார். பின்னர், அவர் மீண்டும் தனது ஊருக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்துள்ளார். அவர் ஊருக்கு செல்ல பேருந்துக் கட்டணம் பத்து ரூபாய் ஆனால், பாக்கெட்டில் இருந்ததோ வெறும் 3 ரூபாய் மட்டும்தான். பேருந்தில் செல்வதற்கே பணம் இல்லாமல் இருந்த தனஜி ஜெக்தலே அங்கே சாலையோரத்தில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் கீழே கிடப்பதைக் கண்டுள்ளார்.
அதைப் பார்த்த ஜெக்தலே உடனடியாக அந்தப் பணத்தை எடுத்து அருகில் இருந்தவர்களிடம் இந்தப் பணம் யாருடையது என்று விசாரித்துள்ளார். அங்கே இருந்த சிலர் இந்தப் பணம் தன்னுடையது இல்லை என்று தெரிவித்துள்ளனர். அப்போது, அந்த இடத்தில் ஒருவர் பதற்றமாகவும் கவலையோடும் எதையோ தேடிக்கொண்டிருந்துள்ளார். அவரைப் பார்த்த ஜெக்தலே அருகில் சென்று விசாரித்தபோது, தன்னுடைய மனைவியின் அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த ரூ.40,000 தொலைத்துவிட்டதைக் கூறியுள்ளார்.
ஜெக்தலே தனக்கு கிடைத்த ரூ.40,000 பணத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளார். தொலைத்த பணம் மீண்டும் கிடைத்ததால் நிம்மதி பெருமூச்சுவிட்ட அந்த மனிதர் ஜெக்தலேவின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார். ஆனால், ஜெக்தலே அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். அவர் வற்புறுத்தியும் ஜெக்தலே வேண்டாம் என்று மறுத்துள்ளார்.
பின்னர், ஜெக்தலே தனது ஊருக்கு செல்ல பேருந்து கட்டணம் பத்து ரூபாய். தன்னிடம் 3 ரூபாய்தான் உள்ளது. அதனால், 7 ரூபாய் மட்டும் கொடுத்தால் போது என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட சதாரா பகுதி பாஜக எம்.எல்.ஏ போன்ஸ்லே ஷிவேந்திரசின் அபய்சின்ராஜே உள்பட பலரும் ஜெக்தலேவைப் பாராட்டி அவருக்கு சன்மானமாக பணம் கொடுத்துள்ளனர். இருப்பினும், அந்த பணத்தையும் ஜெக்தலே வாங்க மறுத்துள்ளார்.
இது பற்றி செய்தி அறிந்த ஜெக்தலே வசிக்கும் அதே மாவட்டத்தின் கோரேகான் தெஹசில் பகுதியைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான ராகுல் பார்க்கே, ஜெக்தலேவின் நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ.5 லட்சம், வெகுமதி அளிக்க முன்வந்துள்ளார். இந்தப் பணத்தையும் ஜெக்தலே ஏற்க மறுத்துவிட்டார்.
இந்த சம்பம் பற்றி ஊடகங்களிடம் பேசிய ஜெக்தலே, அடுத்தவர்கள் பணத்தை பெற்று நாம் ஒருபோதும் திருப்தியாக வாழ முடியாது. நான் மக்களுக்கு கூற விரும்புவது ஒன்று தான், அனைவரும் நேர்மையுடன் வாழ வேண்டும் என்பது மட்டுமே என்று அவர் கூறியுள்ளார்.
பஸ்ஸுக்கு காசு இல்லாமல் போனாலும், வறுமையான வாழ்க்கை சூழ்நிலையிலும் அதிர்ஷ்டவசமாக சாலையோரம் கிடைத்த பணத்தை மட்டுமல்லாமல் தனது நேர்மைக்காக கிடைத்த வெகுமதியையும் வாங்கிக்கொள்ளாமல் நேர்மையை விடாப்பிடியாக பின்பற்றும் ஜெக்தலேவை பலரும் பாராட்டி வருகின்றனர்.