உத்தரகாண்ட் மாநிலத்தின் பலுபுா் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்ற துக்க நிகழ்ச்சி ஒன்றில் கள்ளச்சாராயம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனா். இதனைத் தொடர்ந்து சாராயம் அருந்திய அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்தனர்.
இதே போன்று, உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சஹரன்பூா் மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் அருந்தியதில் பல உயிரிழந்தனர். மலிவான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயம் 10 ரூபாய், 30 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதனால், அதிக அளவிலான மக்கள் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்திருக்கின்றனர். இதில் 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மொத்தமாக இரு மாநிலங்களிலும் சோ்த்து கள்ளச்சாராயத்தால் 70 போ் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களில் 99க்கும் அதிகமானோர் இறந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சஹாரன்பூரில் 59 பேரும், குஷிநகரில் 10 பேரும், ஹரித்வாரில் 30 பேரும் பலியாகி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோர சம்பவம் தொடர்பாக இதுவரை 3,049 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக உத்தரப் பிரதேச அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும், இதுவரை 79,000 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 2,812 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கிட்டத்தட்ட 2,700 நபர்கள் ஆக்ரா வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, அரசு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது. இந்தக் குழு 10 நாட்களில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
முப்பதுக்கும் மேற்பட்ட கள்ளச் சாராயத்தின் மாதிரிகள் சோதனைக்காக லக்னோ அனுப்பப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "அந்த மதுவில் எத்தில் ஆல்கஹாலுக்கு பதிலாக மெத்தில் ஆல்கஹால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சந்தையில் அதன் விலை குறைவு. தவிர, நச்சுத் தன்மை அதிகம் கொண்ட பல பொருட்கள் சாராயத்தில் கலக்கப்பட்டதால் தான் இவ்வளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தனர். மேலும், முழுமையான அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.