தாய்லாந்திலிருந்து நேபாளம் வழியாக கோவாவுக்கு உயர்ரக கஞ்சா கடத்தப்பட்டது தொடர்பாக சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கை கோவா போலீசார் கண்டுபிடித்திருப்பது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித் தாளுக்கு தெரியவந்துள்ளது.
குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையின்படி, கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேர் பாங்காக்கில் இருந்து காத்மாண்டுவுக்கு விமானத்தில் சாக்லேட் பாக்கெட்டுகள் மற்றும் துணிகளில் மறைத்து வைத்து உயர் ரக கஞ்சா கடத்திவந்து, பின்னர் காத்மாண்டுவில் இருந்து கோவாவுக்கு பேருந்து மற்றும் டாக்சிகள் மூலம் கடத்துவதில் ஈடுபட்டுள்ளனர். ஹைட்ரோபோனிக் எனும் உயர் ரக கஞ்சாவின் சர்வதேச சந்தை மதிப்பு வழக்கமான கஞ்சாவை விட 10 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
மார்ச் 8-ம் தேதி, பெங்களூருவைச் சேர்ந்த 26 வயதான கௌதம் என்ற நபர், பாலிதீன் பாக்கெட்டுகளில் பழங்களுடன் மறைத்து கடத்திவரப்பட்ட கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையின்போது, கோவாவில் உள்ள அவரது வீட்டில் இருந்து 11.67 கிலோ எடையுள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் ரூ.11 கோடிக்கு மேல் மதிப்புள்ள இந்த கஞ்சா, கோவாவில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருளாகும். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், தனது X பதிவில் இந்த கைது ஒரு திருப்புமுனை என்று பாராட்டினார். விசாரணையின் போது, பாங்காக்கில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருள் எடுத்துச்செல்ல பாங்காக்கைச் சேர்ந்த நண்பர் ரூ.1 லட்சம் பணம் தருவதாகக் கூறியதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் போலீசாரிடம் தெரிவித்தார்.
"இந்தியாவிற்கு போதைப்பொருள் எடுத்துச்செல்லும்போது,விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகளைத் தடுக்க ஒரு பெண்ணைத் நியமிக்குமாறு அவரிடம் கூறப்பட்டது. எனவே, அவர் ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தினார். பாங்காக் விமான நிலையத்தில் தம்பதிருக்கு' 2 சூட்கேஸ்கள் வழங்கப்பட்டன. போதைப்பொருள் சாக்லேட் பாக்கெட்டுகள் மற்றும் துணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இருவரும் பாங்காக்கிலிருந்து காத்மாண்டுவுக்கு விமானத்தில் ஏறி, பின்னர் காத்மாண்டுவிலிருந்து கோவாவுக்கு டாக்சிகள் மற்றும் பேருந்துகள் மூலம் பயணித்து, சரக்குகளை எடுத்துச் சென்றனர். அதன் பிறகு, கஞ்சா உள்ளூரில் கோவாவில் விற்கப்பட இருந்தது," என்று அதிகாரி கூறினார்.
மேலும் மார்ச் 12 அன்று பெங்களூருவைச் சேர்ந்த மற்றொரு குற்றவாளியான ஷில்னா ஏ அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். பாங்காக்கில் இருந்து பெங்களூருவில் உள்ள உள்ளூர் சப்ளையர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் கும்பலின் முக்கிய உறுப்பினர் அவள் என்று போலீசார் தெரிவித்தனர்.
தொடர் விசாரணையில், மற்றொரு குற்றவாளியான ஸ்ரீஜில் பிபி மார்ச் 19 அன்று கேரளாவின் கண்ணூரில் கைது செய்யப்பட்டார். ஸ்ரீஜில் கடத்தல் கும்பலின் மூலையாக செயல்பட்டார் என்று கோவா குற்றப்பிரிவு எஸ்.பி., தெரிவித்தார். "ஸ்ரீஜில்தான் கௌதம் மற்றும் போதைப்பொருள் கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்ற நபர்களுக்கு சர்வதேச விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தார். உயர் ரக கஞ்சா கோவாவில் விற்கப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் கும்பலின் மற்ற நபர்களுக்கு எதிராக விமான நிலையத்தில் லுக்-அவுட் நோடீஸ் வெளியிடப்பட்டுள்ளன," போலீசார் தெரிவித்தனர்.