பிஎன்பி முறைகேடு நடந்தது எப்படி? நீரவ் மோடி மட்டும்தான் முறைகேட்டுக்கு காரணமா?

(பிஎன்பி) மும்பை கிளையொன்றில் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.11,000 கோடி அளவில் முறைகேட்டில் ஈடுப்பட்டிருப்பதாக புகார் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) மும்பை கிளையொன்றில் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.11,000 கோடி அளவில் முறைகேட்டில் ஈடுப்பட்டிருப்பதாக புகார் எழுந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரித்து வரும் நிலையில், நீரவ் மோடி குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தாங்கள் செலுத்திய பணத்தின் நிலைமை குறித்து கவலை அடைந்துள்ளனர். ஆனால், நாம் சில முக்கிய விஷயங்களை கவனம் கொள்ள வேண்டும்.

– பொதுத்துறை வங்கி என்பதால், பி.என்.பி. வங்கியில் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் தங்களுக்கு மீண்டும் கிடைக்குமா என கவலைகொள்ள தேவையில்லை. தங்கள் பணத்தை இன்சூரன்ஸ் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

– இந்த முறைகேட்டில் வங்கியின் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் ஆடிட்டர்களே முக்கிய குற்றவாளிகள். இவ்வளவு பெரிய முறைகேடு நடைபெறுவது தெரிந்தும் அதனை அவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

முறைகேடு நடைபெற்றது எப்படி?

பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 11,000 கோடி முறைகேட்டை பங்கு சந்தைக்கு கடிதம் மூலமாக தெரிவித்தது.

பிஎன்பி முறைகேடு எப்படி நடந்தது என்பதை இங்கு காண்போம்.

இந்தியாவிலேயே பெரும் வைர வியாபாரியான நீரவ் மோடி, வெளிநாடுகளிலிருந்து வைரங்கள், விலைமதிப்பற்ற முத்துக்களை இறக்குமதி செய்ய வேண்டும். அதற்கு நீரவ் மோடிக்கு பணம் வேண்டும் இல்லையா? அதற்கு என்ன செய்திருக்கிறார்? பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையொன்றை அணுகியிருக்கிறார் நீரவ்.

அதற்கு, 10 சதவீத வட்டியில் அவருக்கு கடன் வழங்க பிஎன்பி தயாராக இருந்தது என உதாரணத்திற்கு வைத்துக்கொள்வோம்.

இதனால், ஏன் வெளிநாட்டு பணத்தில் கடன் பெற்றுக்கொள்ளக்கூடாது என யோசித்திருக்கிறார் நீரவ் மோடி. ஏனென்றால், வெளிநாட்டு பணமாக பெறும்போது வட்டி விகிதம் குறைவு. அதனால், லிபார் வட்டியுடன் 2 சதவீதத்தை சேர்த்து தன்னால் பெற முடியும் என கணக்கு போட்டிருக்கிறார் நீரவ் மோடி.

லண்டன் இன்டர் பேங்க் ரேட் என்பதன் சுருக்கமே லிபார். இது லண்டனின் முதன்மையான வங்கிகளின் வட்டி விகிதங்களை கணக்கில் கொண்டு சராசரியாக கணக்கிடப்படுகிறது. சர்வதேச நிதி சந்தையில் வட்டி விகிதங்களுக்கு லிபார் வட்டி விகிதம் அடிப்படையாக கொள்ளப்படுகிறது. இதன் மாற்றத்தை பொறுத்து, மற்ற நாடுகளுக்கு கொடுக்கப்படும் வட்டி நிர்ணயிக்கப்படுகின்றன.

ஆனால், நீரவ் மோடிக்கு எந்த வெளிநாட்டு வங்கி கடன் தரும். அந்த வங்கிகளுக்குதான் நீரவ் மோடி குறித்து ஒன்றுமே தெரியாதே.

அதனால், நீரவ் மோடி பிஎன்பி வங்கிக்கு சென்று, வெளிநாட்டு வங்கியிலிருந்து தான் கடன்பெற உதவுங்கள் என கேட்டுள்ளார். அதாவது, பிஎன்பி வங்கியானது வெளிநாடு வங்கியில் கடன் பெற நீரவ் மோடிக்கு ‘லெட்டர் ஆஃப் அண்டர்டேக்கிங்’ என்ற பண உத்தரவாத கடிதத்தை அளித்துள்ளது.

இந்த பண உத்தரவாத கடிதம்படி, ஒருவர் எவ்வளவு பணம் கடனாக பெறுகிறாரோ அதற்கு இணையான தொகையை சேவை கட்டணமாக வங்கிக்கு கொடுக்க வேண்டும். உதாரணமாக, நீரவ் மோடி, 100 கோடி கடன் பெறுகிறார் என்றால், குறைந்தபட்சம் 110 கோடி மதிப்பிலானவற்றை பிஎன்பி வங்கிக்கு தர வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் அவ்வாறு கடன் பெறும் தொகைக்கு இணையான பணத்தை பிஎன்பி நீரவ் மோடியிடம் கேட்கவில்லை என்பதுதான் முக்கிய விஷயம்.

அவ்வாறு வெளிநாட்டில் கடன் வாங்கிய ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் அந்த பணத்தை செலுத்தவில்லை என்றால், அதனை ‘பண உத்தரவாத கடிதம்’ வழங்கிய இந்திய வங்கியே செலுத்த வேண்டும் என்பதுதான் விதி.

அவ்வாறு, பிஎன்பி வங்கியின் உயர்நிலை அதிகாரிகள் சிலர் நீரவ் மோடிக்கு இவ்வாறு போலியாக பண உத்தரவாத கடிதம் தயாரித்து கொடுத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. அந்த கடிதத்தை ஆதாரமாகக்கொண்டு, பல்வேறு வெளிநாட்டு வங்கிகள், நீரவ் மோடிக்கும் அவரது பங்குதாரர்களுக்கும் 2011-2014 இடைபட்ட காலத்தில் ரூ.11,300 கோடி ரூபாயை வழங்கியுள்ளது என்பதே முறைகேடு.

×Close
×Close