உத்தர பிரதேசத்தில் தனியார் வங்கியின் போலி கிளையை ஆரம்பித்து மக்களை ஏமாற்றி வந்த ஆசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சமீப காலமாக, வங்கியில் கடன் வாங்கி விட்டு தலைமறைவாகும் தொழிலதிபர்கள் குறித்த செய்திகள் பரவலாக பேசப்பட்டு வந்தன. கடனை திருப்பி அளிக்காமல் வெளிநாட்டில் உல்லாசமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரை கைது செய்ய மத்திய அரசு எந்தவித முயற்சியும் எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தின் முலாயம் நகரில் போலி வங்கிக் கிளையைத் தொடங்கி பொதுமக்களை ஏமாற்றிய வந்த ஆசாமி குறித்து செய்தி அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
வினோத் குமார் கம்ளே என்ற நபர் சில மாதங்களுக்கு முன்பு, முலாயம் நகரத்திற்கு வந்து, தான் கர்நாடக வங்கியின் கிளை மேல் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பின்பு, இந்த பகுதியில் கூடிய விரைவில் கர்நாடக வங்கியின் மற்றொரு கிளை ஒன்றும் வர இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, அந்த பகுதியில் வங்கி நடத்துவதற்கான ஒரு இடத்தைப் பார்த்து, அங்கு 5 பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளார். இதை உண்மை என நம்பிய ஊர் மக்கள் பலர் தங்கள் பணத்தை அந்த வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர்.
சிலர், 10 லட்சம் ரூபாய் வரையிலும், நிரந்தர கணக்குத்தொகையும் வைத்துள்ளனர். இந்நிலையில், அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட ஒருவர், டில்லி கர்நாடக வங்கிக்கு தகவல் கால் செய்து வினோத் குமார் கம்ளே பற்றி விசாரித்துள்ளார். அப்போது, அவர்கள் இப்படி ஒரு பெயர் கொண்ட அதிகாரி தங்கள் வங்கியில் இல்லை என்றும், முகலாயம் நகரில் கர்நாடக வங்கியின் கிளை தொடங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.
பின்பு, அந்த நபர், கம்ளே குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் விசாரணைக்கு வந்த போது கம்ளே மேலாளர் அறையில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறார். அவரிடம் அதிகாரிகள் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/03/boy-1-300x226.png)
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கம்ளே தான் போலி வங்கி அதிகாரி என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், பொதுமக்கள் அதிகளவில் பணத்தை டெபாசிட் செய்த பின்பு, அந்த பணத்தையெல்லாம் சுருட்டிக் கொண்டு வெளிநாட்டிற்கு தப்பித்து செல்லவும் திட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து வினோத் குமார் கம்ளேவை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.37 லட்சம் ரூபாய், மூன்று கணினிகள், வங்கி பாஸ் புத்தகங்கள் உள்ளிட்டவை, பறிமுதல் செய்யப்பட்டன.