நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: How TMC scored an emphatic win in Bengal and why BJP stumbled again
இந்நிலையில், பா.ஜ.க அதன் முக்கிய மாநிலமாக மேற்கு வங்கத்தில் பெரும் பின்னடைவை சந்தித்தது. 2019ல் 18 இடங்களை வென்ற அக்கட்சி, 2024ல் 12 ஆக குறைந்தது. 2021 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, மேற்கு வங்க மாநிலத்தில் அக்கட்சி இரண்டாவது பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) மாநில அரசியலில் தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டது. பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள் அப்படியே இருந்தபோதும், பா.ஜ.க, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸுக்கு இடையே ஆட்சிக்கு எதிரான வாக்குகளைப் பிரித்ததன் மூலம் பயன் பெற்றனர்.
திரிணாமுல் காங்கிரஸுக்கு லாபம் கிடைத்தது எப்படி? பா.ஜ.க சரிந்தது எப்படி?
முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிஸ் கட்சி, வடக்கு மேற்கு வங்கத்தில் காலடி எடுத்து வைத்தது, அங்கு 2019 ஆம் ஆண்டில் 8 மக்களவைத் தொகுதிகளில் ஏழு தொகுதிகளையும் பா.ஜ.க வென்றது. 2021 ஆம் ஆண்டில், டி.எம்.சி மீண்டும் அப்பகுதியில் சிறிய அளவில் காலூன்றியது. மேலும் அது இம்முறையும் தொடர்ந்தது, அக்கட்சி கூச் பெகர் தொகுதியில் வெற்றி பெற்றது. ஜகதீஷ் சந்திர பர்மா பசுனியா மத்திய அமைச்சர் நிசித் பிரமானிக்கை 39,250 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதற்கிடையில், பி மல்தாஹா தக்ஷினை காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டது.
டி.எம்.சி தெற்கு மேற்கு வங்கத்தில் தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது, பர்தமான்-துர்காபூர், ஹூக்ளி, மேதினிபூர் மற்றும் பாரக்பூர் ஆகிய இடங்களை பா.ஜ.க-விடம் இருந்து தட்டிச் சென்றது. 2019 இல் பா.ஜ.க வென்ற அசன்சோல் தொகுதியை அக்கட்சி தக்க வைத்துக் கொண்டது. ஆனால் 2022 இல் நடந்த இடைத்தேர்தலில் தோல்வியடைந்தது.
பா.ஜ.க பின்னடைவைச் சந்தித்த மற்ற பகுதி, நான்கு மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட பழங்குடியினர் ஆதிக்கம் நிறைந்த 2019ல் ஜங்கல்மஹால் பகுதியாகும். இந்தப் பகுதியில் 4 மக்களவை தொகுதிகள் உள்ளன. 2019ல் ஜார்கிராம், பாங்குரா, பிஷ்ணுபூர், புருலியா ஆகிய இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை அக்கட்சியால் பிஷ்ணுபூரை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. அந்தத் தொகுதியில் தற்போதைய எம்.பி சௌமித்ரா கான் 5,557 வாக்குகள் வித்தியாசத்தில் டி.எம்.சி-யின் சுஜாதா மோண்டலை தோற்கடித்தார். மற்றும் புருலியாவில் தற்போதைய எம்.பி ஜோதிர்மய் சிங் மஹதோ டி.எம்.சி-யின் சாந்திராம் மஹதோவை 17,079 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தெற்கு மேற்கு வங்கத்தில், மட்டுவா (அகதிகள் சமூகம்) மத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பங்கான் மற்றும் ரனாகாட் தொகுதிகளை பா.ஜ.க தக்க வைத்துக் கொண்டது. ஒட்டுமொத்தமாக, டார்ஜிலிங், ஜல்பைகுரி, அலிபுர்துவார்ஸ், ராய்கஞ்ச், பலூர்காட், மல்தாஹா உத்தர், புருலியா, பிஷ்னுபூர், ரனாகாட் மற்றும் பங்கான் ஆகிய இடங்களை பா.ஜ.க தக்க வைத்துக் கொண்டது. கூடுதலாக, அது காந்தி மற்றும் தம்லுக் தொகுதிகளையும் வென்றது.
டி.எம்.சி வெற்றி பெற்றது எப்படி?
திரிணாமுல் காங்கிரஸின் வாக்கு சதவீதம் 43.3 சதவீதத்தில் இருந்து 45.76 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தனது சிறுபான்மை வாக்கு வங்கியை அக்கட்சி கிட்டத்தட்ட அப்படியே வைத்திருக்க முடிந்தது. 1999-க்குப் பிறகு முதல் முறையாக சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் பஹரம்பூர் தொகுதியில் இருந்து தோல்வியடைந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரியை வீழ்த்த இது அக்கட்சிக்கு உதவியது. கடந்த ஆண்டு சாகர்டிகி சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு டி.எம்.சி கவலைப்பட்ட சிறுபான்மை வாக்குகள், கட்சிக்கு பின்னால் ஒருங்கிணைந்தன. மற்றும் சி.பி.ஐ(எம்) போட்டியாளர்களான எம்.டி.செலிம், சுஜன் சக்ரவர்த்தி, ஸ்ரீஜன் பட்டாச்சார்யா மற்றும் திப்சிதா தார் போன்றவர்களை வீழ்த்தினர்.
டி.எம்.சி தலைவர் ஒருவரின் கூற்றுப்படி, பா.ஜ.க-வின் ஹிந்துத்துவா ஆதரவுப் பேச்சுக்கள் இரண்டாவது கட்டத்திலிருந்து வங்கத்தில் ஹிந்து வாக்குகளை ஒருங்கிணைக்க உதவவில்லை. அது மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சிக்கு பின்னால் முஸ்லிம் வாக்குகளை ஒருங்கிணைக்க உதவியது.
2021 ஆம் ஆண்டைப் போலவே, டி.எம்.சி-யும் பெங்காலி துணை தேசியவாதத்தின் உணர்வுகளை வெற்றிகரமாகப் பயன்படுத்தி பா.ஜ.க-வை " வெளியாட்கள் (போஹிராகோடோ) கட்சியாக சித்தரித்தது, அது மாநிலத்திற்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதி வருவதை நிறுத்தியது. மம்தா பானர்ஜியைப் போல வலுவான மாநில முகம் பா.ஜ.க-வுக்கு இல்லாததால், இந்த வியூகம் பலனளிப்பதாகத் தோன்றியது.
மம்தா அரசாங்கத்தின் பிரபலமான நலத்திட்டங்கள், குறிப்பாக பெண்களின் வாக்குகளை ஒருங்கிணைப்பதில் அவர்களின் அதிசயங்களைச் செய்தன. ஏழு கட்ட வாக்குப்பதிவுகளிலும் பெண்களின் நீண்ட வரிசைகள் வாக்குச் சாவடிகளில் காணப்பட்டனர். 25 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் மாதாந்திர நிதியுதவி பெற தகுதியுடையவர்களான “லக்ஷ்மிர் பந்தர்” திட்டம் டி.எம்.சி-யின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகும். பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் 1,000 ரூபாயும், பட்டியல் சாதிகள் (SCs) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பெண்களும் 1,200 ரூபாயும் பெறத் தகுதியுடையவர்கள் என்று மம்தா அரசு அறிவித்தது.
“நாங்கள் எப்போதும் சிறுபான்மை வாக்குகளையே கருத்தில் கொள்கிறோம் ஆனால் பெண்களின் வாக்கு வங்கி இப்போது எங்களின் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்றாகும். 2016 சட்டமன்றத் தேர்தலில், கன்யாஸ்ரீ பலன் கொடுத்தார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட லட்சுமி பந்தர், பெண் வாக்காளர்களைக் கவர்ந்தது. இப்போது மம்தா பானர்ஜி தனது வாக்குறுதியைக் காப்பாற்றியதால் அவர்களின் வாக்குகளைப் பெற்றுள்ளோம்." என்று டி.எம்.சி தலைவர் கூறினார்.
பா.ஜ.க-வுக்கு எதிராக வேலை செய்தது என்ன?
ராமர் கோயில், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), டிஎம்சி தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேஷ்காலி விவகாரம் ஆகியவை கட்சிக்கு உத்வேகத்தை அளிக்கத் தவறிவிட்டதாக பா.ஜ.க-வில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
மேற்கு வங்க பா.ஜ.க மூத்த தலைவரின் கூற்றுப்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை (MGNREGS) நிதிக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது கட்சியின் வாய்ப்புகளையும் பாதித்தது. அதனால், கட்சியின் வாக்கு சதவீதம் 40.25% லிருந்து 38.73% ஆக குறைந்தது.
ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டங்களைப் பார்க்கும்போது, மக்கள் எங்களுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிந்தது. ஆனால் அது வாக்குகளாக மாறவில்லை. டி.எம்.சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் வாக்காளர்களிடமிருந்து பெரிய பதிலைக் கொடுக்கவில்லை, ”என்று அந்த பா.ஜ.க தலைவர் கூறினார்.
பா.ஜ.க-வுக்கு வலுவான மாநில முகம் இல்லை என்றும், பிரதமர் மோடியை மட்டுமே நம்பியிருப்பதால் அக்கட்சிக்கு எதிராக சென்றது என்றும் சிலர் கூறுகிறார்கள். “மத்திய தலைமையை அதிகமாக நம்பியிருப்பது இந்தத் தேர்தலில் எங்களுக்கு இழப்பு. சில பகுதிகளில் உள்ள உட்கட்சி பூசல் எங்கள் வேட்பாளர்களுக்கு எதிராகவும் சென்றது,” என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறினார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பது அக்கட்சிக்கு எதிரான மற்றொரு காரணியாகும். 20 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதன் முழு வேட்பாளர் பட்டியலை அறிவிக்க கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆனது. “மேற்கு வங்கத்தில் மக்களவை முடிவுகளை சுயபரிசோதனை செய்ய மாநில தலைமை கண்டிப்பாக கூட்டங்களை நடத்த வேண்டும். இவை அனைத்தும் பின்னர் விவாதிக்கப்படும்” என்று அந்த பா.ஜ.க தலைவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.