Lunar Eclipse or Chandra Grahan of 2022: கடந்த மாதம் (அக்டோபர்) 25ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்த நிலையில், நவ.8ஆம் தேதி திங்கள்கிழமை சந்திர கிரகணம் நிகழப்போகிறது.
இந்தச் சந்திர கிரகணத்தை ஆஸ்திரேலியா, ஆசிய கண்டம், கிழக்கு ஐரோப்பா, வட மற்றும் தென் அமெரிக்கா, இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், ஆர்டிக் மற்றும் அண்டார்டிகா உள்ளிட்ட பகுதிகளில் பார்க்க முடியும்.
நவம்பர் 8ஆம் தேதி நிகழவுள்ளது முழு சந்திர கிரகணம் என்பதால் அது உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் தெரிய வாய்ப்புள்ளது. சில இடங்களில் கிரகணம் முடியும் காட்சிகளையாவது பார்க்க வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது இதுபோன்ற சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் நவ.8ஆம் தேதி சந்திர கிரகணத்தின்போது நிலவு சென்னிறத்தில் மாற வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இது 99 சதவீதம் முழு சந்திரகிரகணம் ஆகும்.
இதேபோன்று அடுத்த சந்திர கிரகணம் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறும். சூரிய கிரகணம் போலல்லாமல், சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது. ஒருவருக்கு சந்திர கிரகணத்தைக் காண சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை, இருப்பினும் தொலைநோக்கியை பயன்படுத்தி பார்த்தால் பார்வை மற்றும் சிவப்பு நிறத்தை மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடி ஒளிபரப்பு
இந்த நிகழ்வின் பல நேரடி ஒளிபரப்புகள் வலையொளியிலும் (Youtube) ஒளிபரப்பப்பட உள்ளன. மேலும், TimeandDate.com நியூ மெக்சிகோவின் ரோஸ்வெல்லில் உள்ள அதன் மொபைல் கண்காணிப்பகத்திலிருந்து முழு நிகழ்வையும் ஒளிபரப்பும்.
இந்த நேரடி ஒளிபரப்பு கிழக்கு நேரம் (Eastern Time- EST) காலை 4 மணிக்கு தொடங்கும். இந்திய நேரப்படி மதியம் 1.30 ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil