திரிபுரா தேர்தல் முடிவுகள் பலருக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சிதான்! சிவப்புக் கோட்டை இப்படி மொத்தமாக காவி மயமாகும் என பலர் எதிர்பார்க்கவில்லை. 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு முடிவு கட்டி, அங்கு மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது.
திரிபுராவில் இதை பாஜக எப்படி சாதித்தது? அல்லது, மார்க்சிஸ்ட் இங்கே ஏன் வீழ்ந்தது? பகுதி-1 இங்கே! (பகுதி 2, தனிக் கட்டுரையாக)
இந்தக் கட்டுரையின் பாகம் 2-ஐ படிக்க, இங்கே ‘க்ளிக்’ செய்யவும்.
திரிபுரா தேர்தல், இந்தியாவில் கொள்கை ரீதியான இடதுகளுக்கும் வலதுகளுக்கும் இடையே நடைபெற்ற நேரடியான முதல் மோதல்! இதில் வெற்றியை பெற பாஜக இரு ஆண்டுகளாக மிகுந்த கவனத்துடன் இங்கு பணியாற்றியிருக்கிறது. அந்த வகையில் மார்க்சிஸ்ட் மேற்கொண்ட பணி சொற்பமானது!
திரிபுரா தேர்தல் முடிவுகளை பாதித்த பிரதான காரணிகள் இவை : நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அமுலாகிக் கொண்டிருக்கும் வேளையில் இங்கு 4-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 25 ஆண்டுகளாக நீடிக்கும் மார்க்சிஸ்ட் ஆட்சியில் திரிபுரா வளர்ச்சியை சந்திக்கவில்லை என்கிற இளைஞர்களின் குமுறல் அடுத்த காரணம்!
திரிபுரா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் தங்களின் தளத்தை வலுப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நெடுநாள் கனவு, அதற்காக அந்த அமைப்பு மேற்கொண்ட உழைப்பு ஆகியன இன்னொரு காரணம்! கடந்த 2016 ஜனவரி முதல் பாஜக அரசியல் ரீதியாக இங்கு முன்னெடுத்த முயற்சிகள் புறக்கணிக்க முடியாத மற்றுமொரு காரணம்!
பாரதிய ஜனதாக் கட்சியின் திரிபுரா பொறுப்பாளரும், ஆர்.எஸ்.எஸ். முன்னாள் ‘பிரசாரக்’குமான சுனில் தியோதருக்கு இந்த வெற்றிக்கான பணிகளை முன்னெடுத்ததில் முக்கியப் பங்கு இருக்கிறது. இது குறித்து தியோதர் கூறுகையில், ‘திரிபுரா வெற்றி மூலமாக கம்யூனிஸ்டின் தண்டுவடத்தை முறித்திருக்கிறோம். இது அவசியத் தேவை. தற்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து கேரளா வரை கம்யூனிஸத்தின் முதுகெலும்பை உடைக்கும் பணியில் இருக்கிறோம். அதில் பெறவிருக்கும் வெற்றிக்கு முன் சமிக்ஞையே திரிபுரா வெற்றி!’ என்கிறார் அவர்.
திரிபுரா தேர்தல் பிரசாரத்தின்போது, ‘மாற்றத்திற்கு வாக்களியுங்கள்!’ என்பதை முக்கிய கோஷமாக பாஜக முன்வைத்தது. அதில் அவர்கள் சுட்டிக்காட்டிய பிரதான அம்சம், மாநிலத்தின் வேலை வாய்ப்பின்மை! 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அரசு ஊழியர்களுக்கு மாநில அரசு அமுல் செய்யாததையும் மீண்டும் மீண்டும் பிரசாரம் செய்தனர்.
பாஜக.வின் திரிபுரா மாநிலத்திற்கான ‘விஷன் டாக்குமென்ட்’டிலும் இன்னமும் அங்கு 4-வது ஊதியக் குழு அடிப்படையிலேயே சம்பளம் வழங்கப்படுவதை பிரதானமாக இடம் பெறச் செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முதல் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வரை மேடைகளிலும் இந்தப் பிரச்னையை பேசினர். பாஜக ஆட்சிக்கு வந்தால் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல் செய்வோம் என வாக்குறுதி கொடுத்தனர்.
4-வது ஊதியக் குழு அடிப்படையில் திரிபுரா அரசு ஊழியர் ஒருவர் தற்போது மாதம் ரூ20,000 வாங்குகிறார் என்றால், 7-வது ஊதியக் குழு அமுலானால் அவரது சம்பளம் உத்தேசமாக ரூ35,00 ஆக உயரும். மாநிலத்தின் வாக்கு வங்கி பெருமளவில் சேவை துறையினரை நம்பியிருக்கும் சூழலில் இது மார்க்சிஸ்ட் கட்சிக்கு பேரிடியாக அமைந்தது.
இந்தப் பிரச்னையை சமாளிக்க விரும்பிய முதல்வர் மானிக் சர்க்கார், ‘அருகிலுள்ள மணிப்பூரிலும் 7-வது ஊதியக் குழுவை அமுல் படுத்தவில்லை’ என்றார். இதை அரசு ஊழியர்கள் ரசிக்கவில்லை. அதுவும் 5-வது முறையாக அங்கு முதல்வர் பதவியை அடைய விரும்பிய மானிக் சர்க்காரிடம் அந்த வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை.
திரிபுரா மார்க்சிஸ்ட் உள்வட்டத்தை சேர்ந்தவர்களும், ‘ஊதியக் குழு பிரச்னை’ தங்களை பெருமளவில் பாதித்துவிட்டதை ஒப்புக்கொண்டனர். ‘அரசு ஊழியர்கள் வாக்குகளில் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் பாஜக.வுக்கு போய்விட்டன’ என குறிப்பிட்டார், மார்க்சிஸ்ட் தலைவர் ஒருவர். பாஜக பொறுப்பாளர் தியோதர் கூறுகையில், ‘மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மொத்தமாக எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். 7-வது ஊதியக் குழு மிக முக்கியமான பிரச்னை’ என்றார் அவர்.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு பாரம்பரியமாக வாக்களித்த குடும்பங்களே இந்த முறை ஓட்டுப் போடுவதில் உடைந்திருக்கின்றன. திரிபுராவின் கிருஷ்ணாநகரில் நெருக்கடியான குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ‘குகா’ குடும்பத்தினர் அவர்கள்! கிழக்கு வங்கத்தில் இருந்து நாட்டு பிரிவினையின்போது இங்கு குடி பெயர்ந்தவர்கள்! பாரம்பரியமாக இவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் குடும்பத்தினர்!
62 வயது தபான் குகாவும், அவரது மூத்த சகோதரரும் மார்க்சிஸ்ட் கட்சியின் தீவிரப் பணியாளர்கள்! 24 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். ‘ஒவ்வொரு வெற்றியின்போதும் மார்க்சிஸ்ட் கட்சி மேலும் மேலும் சர்வாதிகார மயமாகிக் கொண்டிருந்தது. அதனால்தான் நாங்கள் வெளியேறினோம்’ என்கிறார் தபான்.
மார்க்சிஸ்டை விட்டு வெளியேறிய பிறகு, இந்தத் தேர்தல் வரை அவர் வாக்களிக்கவே செல்லவில்லை. ‘மாற்றம் தேவை என அறிந்தேன். இடதுசாரிகளுக்கு மாற்றாக பாஜக இருக்கிறது. இடதுசாரிகளின் ஆட்சி தொடர்ந்திருந்தால் திரிபுராவில் வாழ்வதே கஷ்டம். அவ்வளவு அராஜகம்!’ என்கிறார் தபான்.
ஆனாலும் தபானின் இளைய சகோதரரும், காது-மூக்கு-தொண்டை நிபுணருமான தருண் இடதுசாரிகளுக்கே வாக்களித்ததாக கூறுகிறார். ‘மாற்றம் தேவை என எனது சகோதரர் கூறுவதை ஏற்கிறேன். ஆனாலும் அந்த மாற்றம் பாஜக மூலமாக வருவதை நான் விரும்பவில்லை. அவர்களின் கொள்கையை நான் ஏற்கவில்லை. அவர்களின் இந்துத்துவ அரசியலில் எனக்கு உடன்பாடில்லை. நாங்கள் அமைதியை விரும்புகிறவர்கள். அமைதியான வாழ்க்கையை தொடர விரும்புகிறோம்’ என்கிறார் அவர்.
தபான் குடும்பத்தின் அரசியல் பிளவு அதோடு முடியவில்லை. தபானின் மகன் சுபாதீப் குகா (வயது 30) கூறுகையில், ‘ஆர்.எஸ்.எஸ். கொள்கையை நான் ஏற்கவில்லை. ஆனால் அந்த அரசியலை அவர்கள் இங்கு செய்ய முடியாது.
நரேந்திர மோடியை எனக்குப் பிடிக்கிறது. அதற்காக பாஜக.வுக்கு வாக்களித்தேன். அவரது பர்சனாலிட்டியை விரும்புகிறேன். அவர் ஏதோ சிலவற்றை செய்ய விரும்புகிறார். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. என்று...! அவை தவறாக கூட முடிந்திருக்கலாம். ஆனால் இதற்கு முன்பு வேறு யாரும் எடுக்காத சிரத்தையை அவர் காட்டுகிறார். அது போன்ற தலைமைதான் இப்போது நமக்குத் தேவை
இதர ஒவ்வொரு மாநிலங்களையும் விட திரிபுரா 20 ஆண்டுகள் பின் தங்கியிருக்கிறது. 25 ஆண்டுகளாக இடதுசாரிகள் என்ன செய்தார்கள்? நான் குழந்தையாக இருந்தது முதல் ஒரே அரசைத்தான் பார்த்து வருகிறேன். அதனாலேயே மாற்றத்திற்கு வாக்களித்தேன்’ என்கிறார் சுபாதீப் குகா. இந்தத் தேர்தலில் பல குடும்பங்களிலும் இந்தப் பிளவை பார்க்க முடிகிறது.
பாஜக பொறுப்பாளர் தியோதர் இது குறித்து கூறுகையில், ‘தீவிரமான இடதுசாரி குடும்பங்களில் இருந்தும் வாக்குகள் மாறி வந்திருப்பதை நாங்களும் உணர்கிறோம். குறைந்தபட்சம் 10 சதவிகிதம் வாக்குகள் அப்படி வந்தவைதான். இது நடக்கும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.’ என்றார். பல மாவட்டத்தில் இடது சாரி தொண்டர்கள், பாஜக.வுடன் தொடர்பில் இருந்ததாகவும் தகவல்கள் வருகின்றன. இடதுசாரிகளின் பிரசாரக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் கலந்து கொண்டவர்களும்கூட பாஜக.வுக்கு வாக்களிக்கும் மனநிலையில் இருந்ததால்தான் இவ்வளவு பெரிய வெற்றி பாஜக.வுக்கு சாத்தியமானதாக கூறுகின்றனர். (தொடர்ச்சி -பகுதி2-ல் தனிக் கட்டுரையாக)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.