ராஜீவ் காந்தி இறப்புக்குப்பின் நிலைமையை எப்படி சமாளித்தீர்கள் என ஹரியாணா பெண் விவசாயி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சோனியா காந்தி பதில் அளித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட ‘பாரத் ஜோடோ யாத்திரை’யின்போது, ஹரியாணா மாநில பெண் விவசாயிகளை சந்தித்தார். அப்போது அவர்கள் தலைநகர் டெல்லியை பார்க்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர்.
ஹரியான பெண் விவசாயிகளின் ஆசையை நிறைவேற்ற அவர்களுக்கு ராகுல் காந்தி தனது வீட்டில் விருந்தளித்தார். அப்போது, ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஹரியாணா பெண் விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.
இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் பிரிவுத் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாடே பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில், ஹைரியான பெண் விவசாயி ஒருவர் சோனியா காந்தியிடம், “ராஜீவ் காந்தி இறப்புக்குப் பின் நிலைமையை எப்படி சமாளித்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த சோனியா காந்தி, “மிகுந்த வருத்தமாக இருந்தது” என கூறினார். சோனியா காந்தியால் அதற்கு மேல் பேச முடியவில்லை சற்று துயரத்தில் பேச்சின்றி அமைதியாக இருந்தார்.
அப்போது உடன் இருந்த சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, ஹரியான பெண் விவசாயி கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். “நீண்ட காலமாக அவர் துயரத்தில் நிலைகுலைந்து போயிருந்தார். பல நாட்களாக சோனியா சாப்பிடவில்லை, தண்ணீர்கூட குடிக்கவில்லை” என்றார்.
மற்றொரு பெண் கூறுகையில், “சோனியா பல சிரமங்களை சந்தித்திருப்பார். அனைவரையும் கடவுள் ஆசிர்வதிப்பார்” என்று கூறினார். இந்த பதிலுக்கு சோனியா தலையசைக்கிறார். அவர்கள் உடன் அமர்ந்திருந்த ராகுல் காந்தி இந்த உரையாடலை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஹரியான பெண் விவசாயிகள் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம், ராஜீவ் காந்தி இறப்புக்குப் பின் நிலைமையை எப்படி சமாளித்தீர்கள் என்ற கேள்விக்கு சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் பதில் அளித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் பிரிவின் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாடே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருபதாவது: “21-வது வயதில் சோனியா காந்தி, ராஜீவ் காந்தியின் மனைவியாகி, இந்த நாட்டின் மருமகளாகி 55 ஆண்டுகள் இங்கு வாழ்ந்துள்ளார். ராஜீவ் காந்தியின் மனைவியாக 23 ஆண்டுகள் கழித்தவர், அவர் இல்லாமல் 32 ஆண்டு காலம் கஷ்டப்பட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து, எப்படி ஒருவரால் இவ்வளவு கண்ணியத்துடனும், மிகுந்த அன்புடனும், வேதனையுடனும் வாழ முடியும் என நினைத்து பார்க்கிறேன். நாட்டு மக்களின் நன்மையை பற்றி மட்டுமே பேசும் சோனியா மிகுந்த அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும் எப்படி செயல்படுகிறார் என வியக்கிறேன். இந்த நாடு எப்போதும் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறது, உங்கள் அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"