அரசு முறைப்பயணமாக 1 வாரம் அமெரிக்க சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, நேற்று இந்தியர்கள் குழுமியிருந்த ஹவ்டி மோடி என்ற நிகழ்வில் கலந்து கொண்டார்.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டு அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்த அரங்கில், இறுதியாக 70 ஆண்டுகள் கழித்து ஒரு விசயத்தை வழியனுப்பி வைத்தோம் என்று அவர் கூறுகையில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆரவாரமாக முழக்கம் எழுப்பினார்கள். பின்பு, அந்த விஷயம் சட்டப்பிரிவு 370 பற்றித் தான் என்றும் அவர் கூறினார்.
உலகில் இருக்கும் மற்ற மக்கள் அனுபவிக்கும் அனைத்து விதமான சுதந்திரத்தை தற்போது மக்கள் காஷ்மீரிலும் அனுபவிக்கலாம் என்று அவர் கூறினார். இரண்டு அவைகளிலும் மணிக்கணக்கில் ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்னரே, இம்முடிவை அரசு எட்டியது. ராஜ்யசபையில் பாஜக உறுப்பினர்கள் குறைவாக இருந்த பட்சத்திலும், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், மத்திய அரசின் இந்த முடிவை ஆதரித்தது என்று அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் மற்றும் அந்நாட்டு அரசியல்வாதிகள் மட்டும் அமர்ந்திருக்க, இந்த மாபெரும் மாற்றத்தை உருவாக்கிய இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, 50 ஆயிரம் மக்களும் எழுந்து நின்று தங்களின் மரியாதையையும் பாராட்டுகளையும் கைத்தட்டல்கள் மூலம் தந்தனர்.
பாகிஸ்தான், இந்த விவகாரத்தில் தலையிடுவது குறித்து அவர் பேசுகையில் “தன்னாட்டில் இருக்கின்ற பிரச்சனைகளுக்கே முடிவு எடுக்க இயலாத நாடு, இந்திய நாட்டின் பிரச்சனைகள் குறித்து கவலை கொள்கிறார்கள் . அவர்கள் எப்படி தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதை இந்த உலகம் அறியும்” என்று கூறினார்.
மும்பை தாக்குதல், மற்றும் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்குதலை மேற்கோள்காட்டி பேசிய மோடி, தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் நேரம் வந்துவிட்டது என்றும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவிரவாதத்திற்கு எதிராக நிற்பார் என்றும் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்புக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துங்கள் என்று கூறியபோது, அமெரிக்க அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் எழுந்து நின்று தங்களின் மரியாதையை எழுத்தினர். அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றிணைந்து, தீவிரவாதத்திற்கு எதிராக போர் தொடுக்கும் என்று கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் அமெரிக்க அரசியலில் இருக்கும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஸ்டெனி ஹோயர், ஹாஸ்டன் மேயர் சில்வஸ்டெர் டர்னர், கென்டக்கி மாகாண கவர்னர் மாட் பெவின் மற்றும் செனேட்டர் டெட் க்ரூஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
300 மில்லியன் மக்களை வறுமைக்கோட்டில் இருந்து காப்பாற்றிய மோடி என்று பேச துவங்கிய ட்ரெம்ப், இந்திய மற்றும் உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு குறித்தும் பேசினார்.
Photos: AP
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.