கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ஈத்கா மைதானம், அண்மையில், விநாயகர் சதுர்த்திகொண்டாடுவது தொடர்பாக சர்ச்சையின் மையமாக இருந்தது. நவம்பர் 10 ஆம் தேதி திப்பு ஜெயந்தியைக் கொண்டாட அனுமதி கோரி ஏ.ஐ.எம்.ஐ.எம் மற்றும் சமதா சைனிக் தளம் நகராட்சி நிர்வாகத்தை அணுகியதைத் தொடர்ந்து, ஈத்கா மைதானம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏ.ஐ.எம்.ஐ.எம் தார்வாட் மாவட்ட இணைச் செயலாளர் விஜய் எம் குண்ட்ரல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், ஹூப்ளி-தார்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் (எச்டிஎம்சி) நிலத்தை சொந்தமாக வைத்திருப்பதால், திப்பு ஜெயந்தியைக் கொண்டாட அனுமதிக்க வேண்டும். ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய திப்பு ஜெயந்தியை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று சட்டரீதியாக அவர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம்” என்று கூறினார்.
இருப்பினும், பல வலதுசாரி அமைப்புகள் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் மற்றும் சமதா சைனிக் தளம் ஆகியவற்றின் முடிவை எதிர்த்தன. திப்பு சுல்தான் இந்துக்கள் உட்பட மக்களைக் கொன்றதாகவும் கன்னட மொழிக்கு எதிரானவர் என்றும் கூறினர். இதுகுறித்து ஸ்ரீராம சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறுகையில், “ஆண்டுக்கு இரண்டு முறை நமாஸ் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு நபரை (திப்பு சுல்தான்) கொண்டாட அனுமதிக்க மாட்டோம். அது வன்முறைக்கு வழிவகுக்கும்” என்று கூறினார்.
மைசூர் ராஜ்ஜியத்தின் 17 ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளரான திப்பு சுல்தான், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டு 1799-ல் இறந்தார். வலதுசாரி இந்து அமைப்புகள் கடந்த காலங்களில் திப்பு சுல்தான் இந்து விரோதி என்றும் அவர் பல இந்துக்களை கொன்றதாகவும் குற்றம் சாட்டினர். மேலும், அவரது ஆட்சியின் போது பாரசீக மொழியை திணித்தார் என்று குற்றம் சாட்டினர்.
இதற்கிடையில், எச்.டி.எம்.சி ஆணையர் கோபாலகிருஷ்ண பி இந்த பிரச்சினையில் தொலை பேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கவில்லை.
ஈத்கா மைதானம் ராணி சென்னம்மா மைதானம் என்றும் அழைக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இந்த இடத்தின் சொத்து காரணமாக நடந்த வன்முறையால் செய்திகளில் இடம்பெற்றது. ஆகஸ்ட் 15, 1994-ல் ஈத்கா மைதானத்தில் தேசியக் கொடியை வலுக்கட்டாயமாக ஏற்ற முயன்ற பா.ஜ.க தலைவர் உமா பாரதி தலைமையில் நடந்த போராட்டத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
நிலத்தின் உரிமை தொடர்பாக பல பதிற்றாண்டுகளாக மோதல் நிலவி வந்த நிலையில், இந்த சொத்து மாநகராட்சிக்கு சொந்தமானது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில், இந்து வலதுசாரி அமைப்புகள் இந்த வளாகத்தில் சுதந்திர தினத்தை கொண்டாட திட்டமிட்டதை அடுத்து, அஞ்சுமன்-இ-இஸ்லாம் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியது. இந்த மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம், நிலத்தின் உரிமையாளரான எச்.டி.எம்.சி. முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டது.
காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தலைமையிலான அரசாங்கம் 2016 இல் திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களைத் தொடங்கியது. ஆனால், பா.ஜ.க-வின் பல எதிர்ப்புகள் எழுந்தது. இதனால், மாநிலத்தின் சில பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. 2019-ம் ஆண்டில், பி.எஸ் எடியூரப்பா தலைமையிலான அரசாங்கம் திப்பு சுல்தானின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தது. இந்த ஆண்டு முதன்முறையாக ஹூப்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.