பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதிக்காத நிர்வாகம்: 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

9-ஆம் வகுப்பு மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறையிலிருந்து பள்ளி நிர்வாகம் வெளியேற்றியதால், அந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஐதராபாத்தில் பள்ளிக் கட்டணம் செலுத்தாத 9-ஆம் வகுப்பு மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறையிலிருந்து பள்ளி நிர்வாகம் வெளியேற்றியதால், அந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது,

ஐதராபாத்தில் உள்ள மல்கஜ்கிரி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி சாய் தீப்தி. இவர், அப்பகுதியிலுள்ள ஜோதி எனும் தனியார் பள்ளியொன்றில் 9-ஆம் வகுப்பு படித்துவந்தார். அம்மாணவி பள்ளிக்கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று பள்ளியில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பள்ளி நிர்வாகம் அந்த மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில், “பள்ளிக் கட்டணம் செலுத்தாதை சொல்லி அவமானப்படுத்தி வகுப்பறையிலிருந்து வெளியேற்றியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால், மனவேதனை அடைந்த அச்சிறுமி மாலையில் வீட்டுக்கு வந்து, வகுப்பறையிலிருந்து தான் அனைவரது முன்னிலையிலும் வெளியேற்றப்பட்டதால், அவமானப்படுத்தப்பட்டதுபோல் உணர்வதாக தன் சகோதரியிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, வீட்டின் மின்விசிறியில் அச்சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், அச்சிறுமி எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில், “அவர்கள் என்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா”, என எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தீப்தியின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தையால் குறித்த நேரத்தில் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியவில்லை எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

×Close
×Close