Hyderabad Rape Case: ஹைதராபாத் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் தெலுங்கானா போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் குற்றச் சம்பவம் நடந்த இடத்திற்கு மீண்டும் அழைத்துச் சென்று, எப்படி அந்த சம்பவத்தை நிகழ்த்தினார்கள் என்பதை செய்துக் காட்ட சொல்லியிருக்கிறார்கள். அப்போது அந்த 4 பேரும் தப்பிக்க முயன்றதாகவும், அதனால் போலீசார் அவர்களை என்கவுண்டரில் சுட்டு தள்ளியதாகவும் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் ஒருவர் காவல்துறையினரைத் தாக்கிய பின்னர் தப்பி ஓடியிருக்கிறான். அதோடு மற்ற மூன்று பேருக்கும் சைகை காட்டியதாக போலீசார் குற்றம் சாட்டினர். நால்வரும் தப்பி ஓட முயலும் போது, தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரி ஒருவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம்’ தெரிவித்தார். "குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசாரைத் தாக்கினால் காவல்துறையினர் வேடிக்கைப் பார்ப்பார்களா?" என்று சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி சஜ்ஜனார் கேட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் நேற்று நள்ளிரவுக்குப் பிறகு அவர்கள் பெட்ரோல் வாங்கிய இடத்தைப் பார்க்கவும், இரு சக்கர வாகனத்தை பழுது செய்த இடத்தைப் பார்க்கவும் அழைத்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். "இரவில் அவர்களை வெளியே அழைத்துச் செல்ல நாங்கள் முடிவு செய்ததற்கான மற்றொரு காரணம், பொதுமக்களுடன் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான்" என்றார் மற்றொரு அதிகாரி.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலிஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ள 2-வது சம்பவமாகும். 2008 டிசம்பரில், ஆசிட் வீசால் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர், சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ்காரர்களைத் தாக்க முயன்றபோது வாரங்கல் போலீசாரால் அவர்கள் கொல்லப்பட்டனர். சைபராபாத்தின் தற்போதைய போலீஸ் கமிஷனர் வி.சி சஜ்ஜனார் தான் அப்போது வாரங்கலின் எஸ்.பி-யாக இருந்தார்.
27 வயதான அந்த கால்நடை மருத்துவர் நவம்பர் 27 அன்று ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத் டோல் பிளாசாவில் இருந்து காணாமல் போனார். அவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். மறுநாள் அந்த பெண் மருத்துவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.
குற்றவாளிகளில் ஒருவர் மருத்துவர் வீடு திரும்பும் போது அவரது, பைக்கின் டயரை பஞ்சர் செய்ததாகவும், அப்போது இருவர் உதவிக்கு வந்ததாகவும், அப்போது அவரை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.