தனது இருசக்கர வாகனம் சரி செய்யப்படுவதற்காகக் காத்திருந்த 27 வயதான பெண் கால்நடை மருத்துவர் புதன்கிழமை இரவு ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சைபராபாத் போலீஸாரைப் பொறுத்தவரை, இரவு 8 மணிக்குப் பிறகு அந்த பெண் மருத்துவர் தனது கிளினிக்கிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு டயர் பஞ்சர் ஆனதை கவனித்து, தனது சகோதரியை அழைத்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தை டோல் பிளாசாவில் விட்டுவிட்டு வீட்டிற்கு கேப் புக் செய்து செல்லுமாறு, அவரது சகோதரி கூறியிருக்கிறார். ஆனால், அவர் புக் செய்வதற்கு முன்பு, இரண்டு நபர்கள் அவரை அணுகி, அந்த வாகனத்தை பழுது பார்ப்பதற்காக எடுத்துச் செல்வதாக கூறினர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கு அந்தப் பெண் ஒப்புக் கொண்டு வண்டியை அவர்களிடம் கொடுத்திருக்கிறார். பிறகு, அவ்விருவரும் திரும்பி வருவதற்காக அவர் காத்திருந்தபோது, டோண்டுபள்ளி டோல் பிளாசாவிலிருந்து 50 மீட்டர் தொலைவில் இருக்கும் புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு சாலையின் முனையில் வரிசையாக லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் மறைவில் வைத்து தான் அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.
காவல்துறையின் அறிக்கைப்படி, அப்பெண்ணை கொன்ற பின்னர், குற்றவாளிகள் அவரது உடலை சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டுமானப் பணியில் இருந்த பாலத்திற்கு கொண்டுச் சென்று தீ வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அதிகாரியின் தகவலின்படி, அந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் அப்பெண்ணின் உள்ளாடைகள் கண்டெடுக்கப்பட்டது, அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக நம்ப வழிவகுத்தது என்றார்.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மொத்தம் எத்தனை பேர் என்பதை போலீசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. பழுதுபார்ப்பதற்காக அந்த பெண்ணின் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற அதே ஆண்கள் தான் இச்சம்பவத்தையும் செய்தார்களா என்பதும் இதுவரை தெரியவில்லை. சாலையோரங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்திய லாரி டிரைவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும், அவர் தனது வீட்டிலிருந்து டோண்டுப்பள்ளி டோல் பிளாசாவுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று, அதை அங்கேயே பார்க்கிங் செய்துவிட்டு, அங்கிருந்து கேப் புக் செய்து தான் தனது கிளினிக்கிற்கு செல்வார் என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் போலீசாரிடம் கூறியுள்ளனர். இருப்பினும், புதன்கிழமை மாலை, அவரது டூ வீலரின் ஒரு சக்கரம் பஞ்சர் ஆகி இருந்ததை கண்டறிந்து, இரவு 8.20 மணியளவில் தனது சகோதரியை அழைத்திருக்கிறார் என்று சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி சி சஜ்ஜனார் தெரிவித்தார்.
"டோல் பிளாசா பார்க்கிங்கில் வாகனத்தை விட்டுவிட்டு, கேப் புக் செய்து வீடு திரும்பும்படி சொன்னதாக அவரது சகோதரி ஒப்புக்கொண்டார். சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் தனது சகோதரியைத் திரும்ப அழைத்து, டயர் பழுதுபார்க்க இரண்டு பேர் முன்வந்ததாகவும், அவர்கள் வாகனத்தை எடுத்துச் சென்றதாகவும் கூறினார். தனியாக சாலையின் ஓரத்தில் காத்திருப்பதாகவும் அவர் சகோதரியிடம் கூறியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து, அவரது தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது, குடும்பத்தினர் நள்ளிரவு வரை அவரைக் கண்டுபிடிக்க முடியாதபோது, அவர்கள் ஷம்ஷாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்" என்று ஒரு அதிகாரி கூறினார்.
வியாழக்கிழமை காலை, கட்டுமானத்தில் உள்ள ஒரு ஃப்ளைஓவரின் அடியில் ஓரளவு எரிந்த நிலையில் சடலம் இருப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, அந்த பெண்ணின் குடும்பத்தினர் அழைக்கப்பட்டனர். அவர்கள் ஆடைகளை வைத்து உடலை அடையாளம் கண்டனர்.
இக்கொடூர சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மெஹ்ரீன், நடிகர் அல்லரி நரேஷ், அல்லு சிரிஷ் என பலரும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ட்வீட் செய்துள்ளனர்.