நாம் வாழும் வீட்டை ( சொந்த வீடு அல்ல) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வாடகைக்கு இருப்பது போல, இனி காரையும் மாதவாடகை கொடுத்து அனுபவிக்கலாம் என்ற புதிய திட்டத்தை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், ஏஎல்டி ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகளான சான்ட்ரோ, கிராண்ட் ஐ10, எலைட் ஐ20, வெர்னா மற்றும் கிரேடா வகை கார்களை இனி வாடகைக்கு வாங்கி அனுபவிக்கலாம்.
வாடகை கார் முறையால், கார் உரிமையாளருக்கு ஏற்படும் பிரச்னைகள் , கார் பராமரிப்பு, பழுது தொந்தரவுகள், காரில் பிரச்னை ஏற்படும்போது தேவைப்படும் உதவி மற்றும் கார் இன்சூரன்ஸ் போன்றவைகளிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கிறது.
மாத சம்பளம் பெறுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள், சிறு தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் என அனைவருக்கும் வாடகை கார் பெற தகுதியானவர்கள். இந்த வாடகை கார் முறை, முதற்கட்டமாக டில்லி என்சிஆர், மும்பை, சென்னை, ஐதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களில் துவக்கப்பட உள்ளன.
எந்த நகரம் மற்றும் கார்களின் மாடல்களை பொறுத்து, குறைந்தது 2 ஆண்டுகள் அதிகபட்சம் 5 ஆண்டுகள் என்ற அளவில், கார்கள் வாடகைக்கு விடப்பட உள்ளன.
டில்லியை பொறுத்தவரையில், கார்களின் மாடல், அவற்றிற்கான மாதவாடகை விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கார் மாடல் மாதவாடகை
சான்ட்ரோ 1.1 ஈரா (பெட்ரோல்) ரூ.7,673
கிராண்ட் ஐ10 1.2 ஈரா (பெட்ரோல்) ரூ.8,936
எலைட் ஐ20 ஈரா (பெட்ரோல்) ரூ.9.813
வெர்னா 1.4இ (பெட்ரோல்) ரூ.15,488
கிரேடா1.4 டீசல் இ ரூ.17,642
ஜிஎஸ்டி வரி சேர்த்து தான் இந்த மாதவாடகை என்றும், கார் இன்சூரன்ஸ் மற்றும் இதர பராமரிப்பு சேவை கட்டணங்கள் தனி என ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.