தவறே செய்யமல் இருக்க நான் மோடியல்ல. சாதாரண மனிதன் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று விலைவாசி உயர்வு குறித்து சில விவரங்களை பதிந்துள்ளார். சமையல் எரிவாயு, பருப்பு வகைகள், தக்காளி, வெங்காயம், பால் மற்றும் டீசல் விலைகள் இத்தனை ரூபாய் ஆகி இவ்வளவு சதவிகிதம் உயர்ந்துள்ளது என பதிவிட்டிருந்தார். அதில் சதவிகிதத்தில் தவறாக பதிந்துள்ளார். உதாரணமாக பருப்பு விலை ரூ. 45 லிருந்து ரூ. 80 ஆனதைக் குறிப்பிட்டிருந்தார். அந்த விலையேற்றம் 77% ஆகும் அவர் அதை 177% என பதிவிட்டுள்ளார்.
இதை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். அந்த ட்வீட் பிறகு நீக்கப்பட்டு சரியான புள்ளி விவரத்துடன் புதிய ட்வீட் பதியப்பட்டது. ஆனால் முந்தைய ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டு அதை பாஜக ஆதரவாளர்கள் ராகுலின் தவறு என விமர்சித்தனர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று ட்விட்டரில் ஒரு செய்தியை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.
அதில். "அனைத்து பாஜக நண்பர்களுக்கும் : நான் நரேந்திர மோடி போல் இல்லை. நான் ஒரு மனிதன். மனிதர்கள் சிறு சிறு தவறு செய்தால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். எனது தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, இனிமேலும் என் தவறை நீங்கள் சுட்டிக் காட்டினால் எனக்கு திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும். அனைவருக்கும் எனது அன்பை தெரிவிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.