நான் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம் : பிரகாஷ் ராஜ் பகீர் பேட்டி!

சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்த தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் தற்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரங்களில் பாஜக-வுக்கு எதிராக நடிகர் பிரகாஷ் பரப்புரை செய்து வருகிறார். அவரின் பிரச்சாரங்கள் அனைத்திலும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பற்றி எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில மாதங்களாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வருகிறார். மேலும் பெங்களூருவில் எழுத்தாளர் கெளரி லங்கேஷ் மற்றும் கல்புர்கி ஆகியோரைக் கொன்றது இந்து அமைப்புகள் தான் என்ற எதிர்ப்புகளைப் பதிவிட்டு வருகிறார். இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக-வினர் எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரகாஷ் ராஜ், “நான் பாஜக மற்றும் இந்து அமைப்புகளுக்கு எதிராக இயங்கி வருவதால் என்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதனால் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. நான் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம். இதனால் எனது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

ஆனால் அதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். மோடிக்கு நாட்டைச் சரியாக ஆட்சி செய்யத் தெரியவில்லை. நாட்டில் தேவையில்லாத குழப்பங்கள் உண்டாக்கி அதன் மூலம் ஆதாயம் காண்கிறார். இதனால் பாதிக்கப்படுவது மக்களே. இந்தக் கர்நாடக தேர்தலில் மக்கள் மதவாத கட்சிகளுக்கும், வன்முறையைத் தூண்டும் கட்சிகளுக்கும் வாக்களிக்காமல் ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும்.”

என்று கூறினார்.

×Close
×Close