அருண் ஜெட்லியும் விஜய் மல்லையாவும் பேசிக் கொண்டிருப்பதை நான் நேரில் பார்த்தேன் - காங்கிரஸ் எம்.பி.

நான் கூறுவது பொய்யென்று நிரூபித்தால் அரசியலில் இருந்து வெளியேறுகிறேன் - பி.எல். புனியா

கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லைய்யா 9000 கோடி ரூபாயை பொதுத்துறை வங்கிகளில் கடனாக வாங்கிவிட்டு திருப்பிக் கட்டாமல் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது லண்டனில் இருக்கும் விஜய் மல்லையாவினை இந்தியா அழைத்துவர இங்கிலாந்தின் உதவியை நாடி இருக்கிறது இந்தியா. இது தொடர்பாக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.

அதில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார் விஜய் மல்லையா. விசாரணைக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களை நேரில் சந்தித்தார் மல்லைய்யா. அப்போது “நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லியை நேரில் சந்தித்து நிலைமையை விளக்கிக் கூறினேன் என்றும் மிக விரைவில் கடன்கள் அனைத்தையும் திருப்பி அடைக்க உள்ளேன்” என்று கூறியதை குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இதற்கிடையில் விஜய் மல்லைய்யா கூறிய தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி வருகிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அப்போது “அருண் ஜெட்லியும் விஜய் மல்லையாவும் பாராளுமன்றத்தில் 15 நிமிடங்களுக்கும் மேலாக பேசியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், இது குறித்து அமலாக்கத்துறையிலும் சிபிஐயையிலும் ஜெட்லி ஏன் விளக்கம் தரவில்லை” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல்.

அவர்கள் இருவரும் பேசுவதை நேரில் பார்த்தேன் – மாநிலங்களவை உறுப்பினர்

மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான எம்.பி. புனியா “நான் அருண் ஜெட்லி மற்றும் விஜய் மல்லைய்யா பாராளுமன்றத்தில் பேசியதை நேரில் பார்த்தேன். அவர்கள் இருவரும் 15 நிமிடங்களுக்கும் மேலாக பாராளுமன்ற செண்ட்ரல் ஹாலில் நின்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்தேன்” என்றும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் சிசிடிவி ஃபுட்டேஜ் எடுத்தால் தெரிந்துவிடும் என்றும் புனியா “மார்ச் 1ம் தேதி, 2016 அன்று செண்ட்ரல் ஹாலில் நான் அவர்கள் இருவரும் பேசுவதைப் பார்த்தேன். மார்ச் 3ம் தேதி ஊடகங்கள் விஜய் மல்லைய்யா இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. பாராளுமன்ற அட்டெண்டன்ஸ் மற்றும் சிசிடிவி ஃபுட்டேஜ் என இரண்டையும் பாருங்கள். நான் கூறுவது பொய் என்றால் அரசியலில் இருந்து வெளியேறிவிடுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அருண் ஜெட்லி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வற்புறுத்தி பேசிய ராகுல் காந்தி “ஊழல் புரிந்துவிட்டு ஊரை விட்டு வெளியேறும் பிரச்சனைகளுக்கு நிதித்துறை அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும். ஆனால் நிதித்துறை அமைச்சரே அப்படியான ஆட்களை நேரில் சந்தித்து பேசுகிறார். பின்பு இது குறித்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு தகவல் தர மறுத்துவிடுகிறார்கள் என்று குற்றம் சுமத்தியுள்ளார் ராகுல் காந்தி.

அருண் ஜெட்லி மறுப்பு

நேற்று விஜய் மல்லைய்யாவின் அறிக்கை வெளியான உடனே இது குறித்து அருண் ஜெட்லியிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது நான் விஜய் மல்லைய்யாவை நேரில் சந்திப்பதற்கு அப்பாய்ண்ட்மெண்ட் எதுவும் தரவில்லை. ஒரே ஒரு முறை பாராளுமன்ற வளாகத்தில் இருக்கும் என்னுடைய அலுவலகத்திற்கு நான் செல்லும் போது ராஜ்ய சபா உறுப்பினர் என்ற முறையில் என்னை சந்தித்தார். பின்னர் தன்னுடைய கடன்கள் அனைத்தையும் திருப்பி செலுத்த விரும்புவதாக கூறினார்.

இதை கேட்பது தவறு என்று எனக்குத் தோன்றவில்லை. நான் அவரிடம் “இதை உங்களுக்கு கடன் கொடுத்த வங்கி நிர்வாகிகளிடம் போய் கூறுங்கள்” என்றேன் என்றும், இதற்கு முறை மல்லைய்யா நிறைய முறை இப்படியான போலி வாக்குறுதிகள் கொடுத்திருப்பதை உணர்ந்தால் இந்த அறிவுரையை வழங்கினேன் என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார் அருண் ஜெட்லி.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close