நடிகை தீபிகா படுகோனேவை பாதுகாக்க வேண்டும் என, நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை தீபிகா படுகோனே நடித்து, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் திரைப்படம் பத்மாவதி. இந்த திரைப்படத்தில், ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜ புத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் தீபிகோ படுகோனே நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில், ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக இந்துத்துவ அமைப்புகள் படத்தின் வெளியீட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, டிசம்பர் 1-ஆம் தேதி இத்திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அறிவித்தார்.
இதனிடையே, நடிகை தீபிகா படுகோனேவின் தலையை வெட்டினால் ரூ,10 கோடி பரிசு தரப்படும் என, ஹரியானா மாநில பாஜக ஊடகப்பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் சூரஜ்பால் சர்ச்சை கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், இதற்கு தன் எதிர்ப்பை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நடிகர் கமல்ஹாசன், “தீபிகாவின் தலை பாதுகாக்கப்பட வேண்டும். உடலுக்கு தலை எவ்வளவு முக்கியமோ, அதேபோல் அவருக்கான சுதந்திரத்தை மறுக்கக்கூடாது.”, என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடைய திரைப்படங்களுக்கும் பல சமுதாயத்தினர் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள கமல், வன்முறையுடன் கூடிய எந்த விவாதமும் மோசமானது என கூறியுள்ளார். இது சிந்திக்க வேண்டிய தருணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.