சென்னையில் இருந்து போர்ட் பிளேயருக்கு வாராந்திர கூரியர் சேவையாக நடுத்தர போக்குவரத்து விமானமான ஏ.என்-32 விமானம் ஜூலை 22, 2016-ல் 6 பணியாளர்கள் உள்பட 23 பேர்களுடன் புறப்பட்டு காணாமல் போனது.
இந்திய விமானப்படையின் (IAF) ஏ.என்-32 போக்குவரத்து விமானம் 29 பணியாளர்களுடன் சென்னையில் இருந்து போர்ட்பிளேருக்குச் செல்லும் போது வங்காள விரிகுடாவில் மாயமானது. கிட்டத்தட்ட, 7 ஆண்டுகளுக்குப் பிறகு, நீருக்கடியில் தேடும் வாகனம் மூலம் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து சுமார் 140 கடல் மைல் தொலைவில் கடலின் ஆழத்தில் உள்ளதாக இந்திய விமானப்படை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஏ.என்-32 நடுத்தர போக்குவரத்து விமானம் (பதிவு எண் கே-2743) ஒரு வழக்கமான வாராந்திர கூரியர் சேவையாக சென்னையிலிருந்து போர்ட் பிளேயருக்கு ஜூலை 22, 2016-ல் 6 பணியாளர்கள் மற்றும் 23 பேர்களுடன் காலை 8.30 மணிக்கு புறப்பட்டது. ஆனால், அந்த விமானம் இலக்கை அடையாமல் மாயமானது. அதற்கு பிறகு, பல நாட்களாக கப்பல், விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளால் காணாமல் போன பணியாளர்களையோ அல்லது விமானத்தின் உடைந்த பாகங்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை.
புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) சமீபத்தில், காணாமல் போன ஏ.என் -32 விமானம் கடைசியாக பறந்துகொண்டிருந்த இடத்தில் ஆழ்கடல் ஆய்வு திறன் கொண்ட நீருக்கடியில் தேடும் வாகனத்தை நிலைநிறுத்தியதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும், “மல்டி பீம் சோனார் (ஒலி ஊடுருவல் மற்றும் ரேங்கிங்), செயற்கை துளை சோனார் மற்றும் உயர் தெளிவுத்திறன் புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கடலில் 3400 மீ ஆழத்தில் இந்தத் தேடல் நடத்தப்பட்டது. தேடுதல் படங்களின் பகுப்பாய்வு, சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 310 கிமீ தொலைவில், சுமார் 140 கடல் மைல் தொலைவில், கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் சிதைவுகள் இருப்பதை சுட்டிக்காட்டியது.
தேடுதலில் கிடைத்த படங்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஏ.என்-32 விமானத்துடன் ஒத்துப்போவதாகக் கண்டறியப்பட்டது என்று இந்திய விமானப் படை கூறியுள்ளது. மேலும், விபத்துக்குள்ளான இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுகள், அதே பகுதியில் வேறு எந்த விமானங்களும் காணாமல் போனதாக பதிவுகள் இல்லாதால் இந்த சிதைவுகள் விபத்துக்குள்ளான ஏ.என்-32 ரக விமானத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
காணாமல் போன விமானத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்திய விமானப் படை மட்டும் கடற்படை மற்றும் பிற அமைப்புகளின் முயற்சிகளுக்கு மேலதிகமாக விமானம் காணாமல் போனதாக குறிப்பிடப்பட்ட அந்த பகுதியில் 300 முறை மற்றும் 1000 மணிநேரங்களுக்கு மேல் பறந்து தேடியது.
நீருக்கடியில் 2 ஆராய்ச்சிக் கப்பல்களால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இந்திய புவியியல் ஆய்வின் சமுந்திரா ரத்னாகர் மற்றும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சாகர் நிதி ஆகிய இரண்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் மற்றும் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் வாகனத்துடன் 3.5 கிமீ ஆழம் வரை தேடியது, இறுதியாக இந்த தேடல் வெற்றி பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.