Sandhya K P
IAS officer Kannan Gopinathan resigns : என்னுடைய கருத்து சுதந்திரம் எனக்கு திரும்ப வேண்டும். நான் நானாக வாழ வேண்டும். அது ஒரு நாளாக இருந்தாலும் போதும் என்கிறார் கேரளாவில் பிறந்து வளர்ந்து தாத்ரா நாகர் ஹவேலியின் கலெக்ட்ராக பணியாற்றிய கண்ணன் கோபிநாத். 2012ம் ஆண்டு பேட்சை சேர்ந்த கண்ணன் கோபிநாத் தன்னுடைய பதவியை புதன்கிழமை ராஜினாமா செய்தார். தாத்ரா நாகர் ஹவேலியின் எரிசக்தித் துறை செயலாளராக பணியாற்றினார். அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி இங்கே.
IAS officer Kannan Gopinathan resigns பிரத்யேக பேட்டி
>உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் ஒரு மாநிலத்திற்கே ஒட்டு மொத்த தடையை விதித்த போது, பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு நான் என்னுடைய வேலையை ராஜினாமா செய்தேன் என்றாவது கூற வேண்டும் என்று கூறுகின்றார் இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி.
குரல்களற்று, ஒடுங்கிப்போன மக்களின் குரலாக நான் இருக்க வேண்டும் என்று எண்ணி தான் சிவில் சர்வீஸில் சேர்ந்து பணியாற்றினேன். ஆனால் தற்போது என்னால் என்னுடைய எண்ணங்களையே பேச இயலாமல் போனது. என்னுடைய ராஜினாமா எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இது போன்ற ஒரு இக்கட்டான சூழலில், நான் வெளிநாட்டில் படிக்க சென்றேன் என்று கூறுவதற்கு பதிலாக என் வேலையை ராஜினாமா செய்தேன் என்று கூறுவது மிகவும் சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
இந்த நாட்டின் சிஸ்டம் சரியில்லை. நான் அதை மாற்ற எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனாலும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இல்லை. நான் மக்களுக்காக என்ன செய்தேன் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் அது போதாது என்பதையும் நான் அறிவேன். கையில் ஒரு சேமிப்பும் இல்லை. இருப்பது என்னவோ அரசின் வாடகை வீட்டில். வீட்டினை காலி செய்யக் கூறினால் என்ன செய்வேன் என்றும், எங்கே செல்வேன் என்றும் எனக்கு தெரியாது. ஆனால் என் மனைவிக்கு நல்ல வேலை இருக்கிறது. அவர் எனக்கு பக்க பலமாக இருப்பதே எனக்கு பெரிய ஆறுதலை அளிக்கிறது என்று கூறிகிறார் கண்ணன்.
இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க இயலாது. கடந்த ஆண்டு கேரள வெள்ளத்தின் போது, தம்மக்களுக்காக பெரிய அளவில் உதவி செய்தவர். தாத்ரா நாகர் ஹவேலியின் அட்மினிஸ்ட்ராக 1 கோடி ரூபாயை நிவாரண நிதியாக வழங்கினார். மேலும் நிவாரணப் பொருட்களை ஒரு சாதாரண மனிதன் போல் தோளி்ல் தூக்கிக் கொண்டு சென்றார். அந்த வீடியோ சமூக வலைதளங்கள் முழுவதும் பரவி, அவருடைய சேவையை நாடு அறிந்தது.
கண்ணன் பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் எலெக்ட்ரிகல் எஞ்சினியரிங் முடித்தவர். தனியார் நிறுவனம் ஒன்றில் டிசைன் எஞ்சினியராக பணியாற்றினார். 2012ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேசிய அளவில் 59-வது இடத்தை பிடித்தார் கண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : கேரளாவிற்கு தோள் கொடுத்த தமிழகத்தை சேர்ந்த எம்.ஜி. ராஜமாணிக்கம், ஐஏஎஸ் … கொட்டும் மழையிலும் அதிகாரியின் அர்ப்பணிப்பு