ஆர் சந்திரன்
மத்திய அரசின் தகவல் தொடர்பு ஊடகமான தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ ஊழியர்களுக்கான 2 மாத சம்பளத்தை விடுவிடுக்காமல், மத்திய தகவல் மற்றும் செய்தித் தொடர்புத்துறை அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது. தனது கோரிக்கையை ஏற்காமல், தன் விருப்பம் போல செயல்படுவதால், இந்த முடிவு எடுக்கப்படுவதாக ஸ்மிருதி இரானி தலைமையில் இயங்கும் இந்த அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
அரசு ஊடகங்களான தூர்தர்ஷனும், ஆல் இந்தியா ரேடியோவும் பிரசார் பார்தி என்ற தன்னாட்சி அமைப்பின் கீழ் செயல்படும் என முடிவு செய்யப்பட்டு, அதன் தேவைகளுக்கு மத்திய அரசின் தகவல் மற்றும் செய்தித் தொடர்புத்துறை நிதியுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில், பிரசார் பார்தியில் வேலை செய்யும் ஊழியர்களில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் நபர்களை நிறுத்தும்படி அமைச்சகம் சார்பில் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால், இதற்கு பிரசார் பார்தி உடன்படவில்லை. தன்னாட்சி கொண்ட ஒரு அமைப்பில் எல்லா முடிவுகளையும் அவர்களது தேவையைப் பொறுத்து அதன் நிர்வாகிகளேதான் எடுப்பர். இதில் மத்திய அரசு தலையிடுவதை அனுமதிக்க இயலாது என, பிரசார் பார்தி தலைவ்ர் பொறுப்பில் உள்ள சூரிய பிரகாஷ் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அமைச்சகம் இதை ஏற்கவில்லை. தொடர்ந்து பலமுறை இது குறித்து குறிப்புகளை அனுப்பி வற்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், பிரசார் பார்தி தலைவர் சூரிய பிரகாஷ், தற்போது இதுகுறித்து பேசுகையில், கடந்த ஜனவரி, பிப்ரவரி என இரண்டு மாதங்களாக பிரசார் பார்தி ஊழியர்களுக்கான சம்பளம் சுமார் 400 கோடி ரூபாயை அமைச்சகம் நிறுத்திவிட்டது. அதனால், தற்போது, பிரசார் பார்தி தனது மற்ற உள் நிதியாதாரங்களை வைத்து சமாளித்து வருகிறது என கூறியதாக லைவ் மின்ட் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. பிரசார் பார்தியில் சுமார் 5000 பணியாளர்கள் உள்ளனர்.
அதோடு, மத்திய அரசின் செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறையின் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி, 2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் பிரசார் பார்திக்கான நிதியுதவி 200 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கப்பட்டு, 2,996 கோடி வழங்க முடிவு எட்டியுள்ளது.
ஆனாலும், 2 மாதமாக ஊழியர்களின் சம்பளத்துக்கானத் தொகைக்கு இன்னும் ஒப்புதல் தராமல் இருக்க, இந்த அமைச்சகம் சில காரணங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசிடமிருந்து நிதியுதவி என பெற்றுக் கொள்ளும் எந்த அமைப்பாக இருந்தாலும், அது தன்னாட்சி அதிகாரம் என குறிப்பிட்டாலும், அமைச்சகம் குறிப்பிடும் நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பான கட்டளைகளுக்கு உடன்பட்டுத்தான் ஆக வேண்டும். ஒருவேளை உடன்பட மறுத்தால், தமது விருப்பப்படி, அமைச்சகம் முடிவு எடுக்க அதிகாரம் உண்டு. அதன்படித்தான் இப்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சக நிதியைப் பெற வேண்டினால், அதன் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்று பிரசார் பார்தி நடந்து கொள்ளட்டும் என கூறப்பட்டுள்ளது.