கொரோனா பரிசோதனைக் கட்டணம் எவ்வளவு? மாற்றியமைக்க ஐ.சி.எம்.ஆர் பரிந்துரை

தனியார் ஆய்வகங்களில் நாவல் கொரோனா வைரஸை கண்டறியும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வதற்கு மார்ச் மாதம் நிர்ணயிக்கப்பட்ட ரூ.4,500 விலையை குறைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்துள்ளது.

By: Updated: May 26, 2020, 04:17:21 PM

தனியார் ஆய்வகங்களில் நாவல் கொரோனா வைரஸை கண்டறியும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வதற்கு மார்ச் மாதம் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ.4,500 என்பதை  மாற்றியமைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஐ.சி.எம்.ஆர் பரிந்துரை செய்துள்ளது.

தனியார் பரிசோதனை ஆய்வகங்கள் கோவிட்-19 பரிசோதனை கட்டண விலை ரூ.4,500 என்பது மிகவும் அதிகம் என்று கூறுகின்றன. மேலும், தனியார் ஆய்வகங்களில் தினசரி கோவிட்-19 பரிசோதனை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 20 சதவீதம் தேங்கி நிற்கின்றன. இதனால், மத்திய அரசு அதன் விலையை மேலும் குறைக்க விரும்புகிறது.  இந்த விலை குறைப்பு உலக அளவில் சோதனைக் கருவிகள் மற்றும் பிற பொருட்கள் கிடைப்பதைப் பொறுத்து உள்ளது. மார்ச் மாதத்தைப் போல இல்லாமல், இவை அனைத்தும் கடுமையான உலக அளவிலான போட்டிக்கு மத்தியில் இறக்குமதி செய்யப்பட வேண்டியிருந்தது.

சுகாதார ஆராய்ச்சி செயலாளர் டாக்டர் பல்ராம் பார்கவா திங்கள்கிழமை மாநிலங்களுக்கு எழுதிய கடிதத்தில், “இப்போது பரி​​சோதனை பொருட்களின் விநியோகம் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன. பலர் உள்ளூர் சந்தையில் இருந்து இந்த கருவிகளை வாங்கத் தொடங்கியுள்ளனர். உள்நாட்டில் தயாராகும் பரிசோதனை பொருட்கள் கருவிகள் எல்லாம் மாறுப்பட்ட விருப்பங்களின் காரணமாக போட்டி அதிகரித்து அவற்றின் விலைகள் குறைந்து வருகின்றன.

கோவிட்-19 வைரஸ் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐ.சி.எம்.ஆர் நோய் அறிகுறி உள்ள நபர்களுக்கு விரைவாக ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனை செய்வது நல்லது என்று கருதுகிறது.

இந்த பின்னணியில் பரிசோதனைப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, 17/3/2020 தேதியிட்ட கடிதத்தில், பரிசோதனை பொருட்களின் உச்சவரம்பு விலை ரூ.4,500 இப்போது பொருந்தாது. எனவே, அனைத்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேச நிர்வாகங்களும் தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அரசாங்கத்தால் அனுப்பப்படும் மாதிரிகளுக்கு இந்த ஆய்வகங்களில் பரிசோதனை செய்வதற்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விலைகளை நிர்ணயிக்கவும் அறிவுறுத்தப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் துறையில் நாவல் கொரோனா வைரஸ் நோய்க்கான மாதிரிகளை பரிசோதிப்பதற்கான தற்போது உள்ள விலை ரூ.4,500 மார்ச் மாதம் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து சில நாட்களுக்குப் பிறகு, கோவிட்-19 க்கு இலவச சோதனைகள் செய்யுமாறு தனியார் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த உத்தரவு ஒரு வாரத்தில் மாற்றப்பட்டது. ஆனால், தனியார் ஆய்வகங்கள் பரிசோதனை விலை ரூ.4,500 உடன் பிற செலவுகளை பெற இயலாது. கோவிட் அல்லாத செயல்பாடுகள் 18-20 சதவீதம் குறைந்துவிட்ட நிலையில், தனியார் ஆய்வகங்கள் பரிசோதனையை நாட்டிற்கு ஒரு சேவையாக செய்து வருகின்றன.

ஏப்ரல் 16 முதல் மே 23 வரையிலான பரிசோதனை பதிவுகளின் ஆய்வுப்படி, அரசு ஆய்வகங்களில் சோதனைகள் 23,932 லிருந்து 88,947 ஆக அதிகரித்து ஏறக்குறைய 270 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை எண்ணிக்கை 4408 முதல் 21450 வரை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. தனியார் ஆய்வகங்கள் ஏப்ரல் 16-ம் தேதி செய்த 28,340 மொத்த பரிசோதனைகளில் 15 சதவீதம் மட்டுமே தங்கள் பங்கு பரிசோதனையாக செய்தன. மே 23-ம் தேதி செய்யப்பட்ட மொத்த பரிசோதனை 1,10,397 எண்ணிக்கையில் 19% சதவீத பரிசோதனையாக செய்தன.

சுகாதார ஆராய்ச்சி செயலாளர் டாக்டர் பல்ராம் பார்கவா எழுதிய கடிதத்தில், “கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கிய காலத்தில், வைரஸ்களின் மூலக்கூறு கண்டறிவதற்கு இந்தியா இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகளை பெரிதும் நம்பியிருந்தது. அதனால், கருவிகள் மற்றும் ஆய்வகங்களில் பரிசோதிப்பதில் உலக அளவில் நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவில் கிடைத்த தரவுகளில், மார்ச் மாத நடுவில் கொரோனா வைரஸ் கண்டறியும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வதற்கான விலை இல்லை. இறக்குமதி செய்யப்பட்ட கருவிகளின் விலை மற்றும் பரிசோதனையை மேற்கொள்வதற்கான முயற்சிகளைக் கருத்தில் கொண்டு, ஐ.சி.எம்.ஆர் ஒரு பரிசோதனைக்கு விலை அதிகபட்சமாக ரூ.4,500 என பரிந்துரைத்தது. இது 17.03.2020 தேதியிட்ட ஐசிஎம்ஆர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த ஆய்வகங்களில் 182 தனியார் ஆய்வகங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் நாட்டின் மொத்த ஆய்வக உள்கட்டமைப்பில் 29 சதவீதம் தனியார் ஆய்வகங்களாக உள்ளன. கோவிட்-19 பரிசோதனை தற்போது 428 அரசு ஆய்வகங்களில் நடந்து வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Icmr tells states revise price for covid 19 testing

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X