ராஜஸ்தான் மாநிலம் அல்வார் அருகே உள்ள ராம்கர் என்ற கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரண்டு பசு மாடுகளுடன் வந்த இரு முஸ்லீம் இளைஞர்களை கும்பல் ஒன்று வழிமறித்தது. அவர்கள் பசு மாடுகளை கடத்திச் செல்வதாக கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் உருட்டுக்கட்டை உள்ளிட்டவற்றால் இருவரையும் கடுமையாக தாக்கினர். இதில், ரக்பர் கான் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
இதற்கிடையே, கும்பலால் தாக்கப்பட்ட இரு இளைஞர்களும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், போலீசார், அவர்களை முதலில் மருத்துவமனையில் சேர்க்காமல், தனியாக ஒரு மினிவேனைப் பிடித்து இரு பசுமாடுகளையும், 10 கி.மீ தொலைவில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். அதன்பின்பு, பசுமாடுகளைக் கடத்தியது ஏன்? எனக்கேட்டு இருவரையும் அடித்த போலீஸார், அதற்கு பிறகே 4 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லாமல், வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தி தேநீர் அருந்திவிட்டு, அதன்பின் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அதற்குள், ரக்பர் கான் உயிரிழந்துவிட்டார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.20 மணிக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் அதிகாலை 4.30 மணிக்குத்தான், 4 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனையில் இரு இளைஞர்களையும் அனுமதித்துள்ளனர் என்று முதல்தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை அண்மையில் கண்டித்த உச்சநீதிமன்றம், ‘இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆகும்’ என்று கூறி, ‘யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது’ என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும், இதனை தடுக்க புதிய சட்டத்தை அரசு இயற்றலாம் எனவும் கருத்து தெரிவித்திருந்தது.
இதனால், இந்த வகை கும்பல்களின் அட்டகாசத்தை அடக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதற்கட்ட பணியாக மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு, நான்கு வாரங்களில் இது தொடர்பான பரிந்துரைகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான மூத்த அமைச்சர் குழுவிடம் சமர்ப்பிக்கும். ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழு, இந்த பரிந்துரைகளை பரிசீலித்து, அதில் உள்ள அம்சங்களை ஆராய்ந்த பின்னர், தங்களது பரிந்துரையை பிரதமர் மோடியிடம் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார், இந்த சம்பவம் குறித்து சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ''நாட்டில் பசுப் பாதுகாவலர்களால், பசுமாடுகளைக் கடத்திச் செல்பவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு வருகிறது. மக்கள் பசு மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், ஏன் இந்தக் குற்றம் நடக்கப்போகிறது? பசு மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், அடித்துக்கொல்லும் குற்றம், உள்ளிட்ட பல குற்றங்கள் தடுக்கப்படும்.
பசுவைக் கொல்லுதல் எந்த மதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்து மதத்தில் இது கோமாதாவாகப் பார்க்கப்படுகிறது. புனித ஏசு மாட்டுக்கொட்டகையில்தான் பிறந்தார். முஸ்லிம் மதத்தில் மெக்கா, மெதினாவில் பசுவைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது. எந்த மதத்திலும் பசுவைக் கொல்லுதல் சரி என்று குறிப்பிடப்படவில்லை.
இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க சட்டம் இருக்கிறது. அரசும் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். அதேசமயம், மக்களும் தங்களின் சமூகப்பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆனால், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மற்றவருடைய நம்பிக்கைகளைப் புண்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை. மக்களின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை தேவை.'' என்று தெரிவித்துள்ளார்.