பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மக்களவை தேர்தலில் பெரும் வெற்றிப் பெற்ற நரேந்திர மோடிக்கு இன்று(மே.26) தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் அந்த செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இரு நாடும் இணைந்து மக்களின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும் என மோடியிடம் இம்ரான் கான் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் தெற்காசியாவில் அமைதி, முன்னேற்றம், செழிப்பு ஆகியவற்றை திரும்பச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். மோடியுடன் இணைந்து பணியாற்றி மேற்கூறிய எல்லாவற்றையும் நிறைவேற்றத் தயாராக இருப்பதாவும் அவர் கூறியிருக்கிறார். முன்னதாக, மோடிக்கு வாழ்த்து தெரிவித்தது குறித்து இம்ரான் கான் தனது ட்விட்டரிலும் பகிர்ந்துள்ளார்.
May 2019
மேலும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், தீவிரவாதத்தை வேரறுத்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தவிர, தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமருக்கு பாரத பிரதமர் நன்றி தெரிவித்தார் என்றும் கூறியுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு பதட்டத்தின் உச்சியில் இருந்தது. புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, பாலகோட்டில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், 'தீவிரவாதத்திற்கு எதிராக வருங்காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதைப் பொறுத்தே பாகிஸ்தானுடனான எதிர்கால உறவு இருக்கும்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தகது.
நரேந்திர மோடி ஆட்சியமைக்க குடியரசுத்தலைவர் அழைப்பு விடுத்த நிலையில் வரும் 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்கிறார். குடியரசுத்தலைவர் மாளிகையில் வரும் 30ஆம் தேதி புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறுகிறது.