2ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தீர்ப்பு தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிபதி சைனி அறிவித்துள்ளார்.
யூபிஏ 1 அரசில் திமுக அங்கம் வகித்தது. திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். அவர் அமைச்சராக இருந்த போது, ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தது. தணிக்கை துறை அறிக்கையில் 1.75லட்சம் கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
இது குறித்து எதிர் கட்சிகள் விசாரணை நடத்த வலியுறுத்தின. உச்ச நீதி மன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. கோர்ட் உத்தரவின் பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உட்பட பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரிக்க பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. தனி நீதிபதி சைனி தலைமையில் கடந்த 7 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்துவிட்ட நிலையில் தீர்ப்பு எழுதும் பணி முடிவடையாமல் உள்ளது.
இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறித்து இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி சைனி சொல்லியிருந்தார். இன்று காலை நீதிமன்றம் வந்த நீதிபதி சைனி, ‘தீர்ப்பு இன்னும் முழுமையாக எழுதி முடிக்கப்படவில்லை. லட்சக்கணக்கான பக்கங்கள் படிக்க வேண்டியதிருப்பதால், தீர்ப்பை எழுத தாமதமாகிறது. வரும் டிசம்பர் 5ம் தேதி, தீர்ப்பு தேதியை அறிவிக்கிறேன்’ என்று கூறினார்.
இதுவரையில் தீர்ப்பு தேர்தியை மூன்று முறை அறிவிப்பதாக சைனி சொல்லி தள்ளி வைத்துள்ளார். மீண்டும் இன்றும் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படவில்லை. டிசம்பர் 5ம் தேதியாவது தேதி அறிவிக்கப்படுமா? அல்லது அன்றும் தேதியை தள்ளி வைப்பாரா என்பது சைனிக்கே வெளிச்சம்.