பிரதமர் மோடி ஜூலை 11-ம் தேதி தொடங்கிவைத்த அரசு வேலைவாய்ப்பு தளத்தில் வெறும் 40 நாட்களில் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், வேலை கிடைத்த நபர்களின் எண்ணிக்கை பதிவுசெய்தவர்களில் ஒரு பகுதி மட்டும்தான். இது கோவிட்-19 தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு வேலைவாய்ப்பு அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அரசியல் பொருளாதார சவாலாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.
ஒரு வாரத்தில், ஆகஸ்ட் 14ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இந்த வாரத்தில் வேலைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை 691ஆக உள்ளது.
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (ASEEM) (ஆத்மனிர்பர் திறமையான ஊழியர் பணியாளர்களை தேர்வு செய்தல்) தளம் அளித்துள்ள தரவுகளின்படி, வேலை தேடும் 3.7 லட்சம் விண்ணப்பதாரர்களில் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே ஒரு வேலை கிடைத்துள்ளது. பதிவுசெய்த 69 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில், 1.49 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 7,700 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பல்வேறு திறன்களைப் பயிற்சி பெற்றவர்களுக்கு உதவுவதற்காகத்தான் இந்த தளம் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இதில், பதிவுசெய்தவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டுமல்ல என்று அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது. இதில் சுயதொழில் செய்யும் தையல்காரர்கள், எலக்ட்ரீசியன்கள், கள-தொழில்நுட்ப வல்லுநர்கள், தையல் இயந்திர ஆபரேட்டர்கள் மற்றும் ஃபிட்டர்கள் ஆகியோர் ஆர்வலர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றனர். அதே நேரத்தில் கூரியர் டெலிவரி நிர்வாகிகள், செவிலியர்கள், கணக்கு நிர்வாகிகள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் தேவை அதிகமாக உள்ளது.
கர்நாடகா, டெல்லி, ஹரியானா, தெலங்கானா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன என்று தரவுகள் காட்டுகின்றன. இந்த மாநிலங்கள் மார்ச் மாதம் பொதுமுடக்கம் தொடங்கியதிலிருந்து, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறுவதைக் கண்டன. ஆகஸ்ட் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தவர்கள் 2.97 லட்சத்திலிருந்து 3.78 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால், வேலை தேடும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் 80 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், உண்மையில் வேலைவாய்பு பெற்ற விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை இந்த காலகட்டத்தில் 7,009 முதல் 7,700 என வெறும் 9.87 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த இந்த வாரத்தில் வேலைவாய்ப்பு தளத்தில் பதிவுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 61.67 முதல் 69 லட்சம் என்று 11.98 சதவீதம் அதிகரித்துள்ளது.
ASEEM தளத்தின் தரவுகளின்படி, ஜூன் மாதம் பிரதமரால் 116 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தின் கீழ் வேலை தேடுபவர்களில் பெண்கள் 5.4 சதவீதம் மட்டுமே உள்ளனர்.
514 நிறுவனங்கள் இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 443 நிறுவனங்கள் 2.92 லட்சம் வேலைகளை வெளியிட்டுள்ளன. இதில், 1.49 லட்சம் வேலை தேடுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தரவுகள் காட்டுகின்றன.
ஆகஸ்ட் 21-ம் தேதியுடன் முடிவடைந்த இந்த வாரத்தில், தளத்தில் செயலில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை (குறைந்தது 1 வேலை வாய்ப்பை குறிப்பிட்டுள்ளவை) முந்தைய வாரத்தில் 419 ஆக இருந்தது இப்போது 443 ஆக உயர்ந்துள்ளது.
லாஜிஸ்டிக்ஸ், சுகாதாரம், வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு (பி.எஃப்.எஸ்.ஐ), சில்லறை மற்றும் கட்டுமானம் ஆகியவை இந்த வேலைவாய்ப்பு தளத்தில் சுமார் 73.4 சதவீத வேலைகளை வழங்கும் துறைகளாகும்.
பயிற்சி பெற்ற / திறமையான தொழிலாளர்களை அளிக்கும் பக்கத்தைப் பொருத்தவரை, வேலை தேடும் நபர்களில் 42.3 சதவீதம் பேர் பெரிய மாநிலங்களான உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, தமிழ்நாடு மற்றும் டெல்லியைச் சேர்ந்த மக்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த தளத்தில் வெளியிடப்பட்ட மொத்த வேலைகளில், 77 சதவீதத்திற்கும் அதிகமானவை கர்நாடகா, டெல்லி, ஹரியானா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் உள்ளன.
இருப்பினும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான திறமையான இளைஞர்கள் பற்றி தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். “நம்முடைய திறமையான இளைஞர்கள் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை விரைவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும். பிரதமர் நரேந்திர மோடியின் தன்னம்பிக்கை மற்றும் திறன் இந்தியா மிஷனை விரைவுபடுத்துவதற்காக, நாட்டின் இளைஞர்களை புதிய வேலை வாய்ப்புகளுடன் இணைக்க, நம்முடைய ASEEM தளம் சந்தையில் வழங்கல் மற்றும் தேவையை குறைப்பதற்கான நம்முடைய தொடர்ச்சியான முயற்சிகளுக்கு நிச்சயமாக உத்வேகம் அளிக்கும். நம்முடைய திறமையான தொழிலாளர்கள் நம்முடைய உற்பத்திக்கு அதிக உற்பத்தித்திறனையும் சிறந்த பலன்களையும் உறுதி செய்வார்கள்.” என்று அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.