திருமணங்களில் மாப்பிள்ளைக்கு பல மரியாதைகள் செய்யப்படும். மாப்பிள்ளையை, கார், குதிரை வண்டி ஆகியவற்றில் அழைத்துவந்து உறவினர்கள் மரியாதை செய்வர். அப்படி, ராஜஸ்தானில், திருமணத்திற்கு முன்பு மாப்பிள்ளை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியில் ஊர்வலம் வரும் ‘பந்தோரி’ எனப்படும் சடங்கு உள்ளது. இது காலம்காலமாக ஆண்களுக்கு மட்டுமே செய்யப்படும் மரியாதை. இந்த நெடுங்கால பழக்கத்தை மாற்றியிருக்கிறார் ஒரு பெண்.
/tamil-ie/media/media_files/uploads/2018/01/1efa675c-9eec-4c31-9572-52864d842b0b-300x201.jpg)
ராஜஸ்தான் மாநிலம் சுன்சுனூ மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்கி அஹ்லாவத். இவர் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். இவருக்கும் டெல்லியை சேர்ந்த குஷல் குப்தா என்பவருக்கும் உதய்பூரில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், முதன்முறையாக ‘பந்தோரி’ சடங்கில் வழக்கத்தை மாற்றி கார்கி, குதிரை பூட்டிய அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வலம் வந்தார். இதற்கு உள்ளூர் மக்கள் பலரும் பெரும் ஆதரவை தந்துள்ளனர். மேலும், அந்த ரதத்தை அவரே அலங்கரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, கார்கி கூறியதாவது, “கிராமங்களில் உள்ள மக்கள் மற்றவர்களின் செயல்பாடுகள் மூலமாகத்தான் தாக்கம் பெறுவர். கட்டுரைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் மாற்றம் வராது. என்னால் ஏற்படுத்தப்பட்ட இந்த மாற்றம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும். இதனை மற்ற குடும்பங்களும் பின்பற்றுவர்”, என கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/01/305e7eb9-2c24-413e-8457-09312480cde7-300x225.jpg)