பீகார் மாநிலத்தில் காதலியிடம் வாட்ஸ் ஆப் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போதே 19 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணையம் பரவலாக பயன்படுத்த துவங்கப்பட்ட பின்னர், வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், தங்கள் தற்கொலையை வீடியோவாக நேரலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, முகநூலில் லைவ் ஆப்ஷன் மூலம் தற்கொலையை சிலர் நேரலை செய்த சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவையாக உள்ளன.
இத்தகையை சம்பவங்களுக்கு சமீபத்திய உதாரணம் பீகார் மாநிலம் பாட்னாவில் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,
பாட்னாவை சேர்ந்த 19 வயது இளைஞர் ஆகாஷ் குமார். இவர் தேர்வில் தோல்வியடைந்து, நண்பர்களுடன் பொழுதுபோக்கிக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இவர் சமீபத்தில் அதிகாலை 3 மணியளவில் தன் காதலியுடன் வாட்ஸ் ஆப்பில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
முன்னதாக, தன் காதலியிடன் செல்போனில் பேசி ஆன்லைனுக்கு வருமாறு கூறியுள்ளார். இதுகுறித்து, அப்பெண் கூறியதாவது, வாட்ஸ் ஆப் லைவ் வீடியோவில் பேசிக் கொண்டிருக்கும்போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசாரிடம் தெரிவித்திருக்கின்றார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆகாஷ் குமாரின் காதலி 12-ஆம் வகுப்பு மாணவி என்பதும், இவர்களுடைய காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதாகவும் தெரியவந்துள்ளது. இதனால், ஆகாஷ் குமார் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதனிடையே ஆகாஷ் குமாரின் காதலிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.