உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அயோத்தியில் சர்வதேச விமான நிலையம், சாலை விரிவாக்கம், ரயில் நிலையம் புதுப்பித்தல் உள்பட மெகா உள்கட்டமைப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ராமர் கோயிலில் அடுத்த ஆண்டு சிலை நிறுவப்பட உள்ளது. இந்நிலையில் நகரில் திட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நேற்று (செப். 4) தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா திட்டப் பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அம்மாவட்ட கோட்ட ஆணையர், மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் தொடர்ந்து திட்டப்பணிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். உ.பி அரசு தற்போது அயோத்தியில் 252 திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
"டிசம்பர் 2023க்குள் ராமர் சிலை நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் கோயிலின் தரைத்தளம் கட்டி முடிக்கப்படும். பக்தர்களின் வருகை ஏற்கனவே அதிகரித்துள்ளது" என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் அனில் மிஸ்ரா கூறினார்.
“கோயில் தொடர்பான பணிகள் கிட்டத்தட்ட 40 சதவீதம் முடிந்துவிட்டன,” என்று அவர் கூறினார். ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை அமைத்தது.
அதிகாரிகள் கூறுகையில், "அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் நகரம் முற்றிலும் புதிய தோற்றத்தில் காணப்படும்.
சாதாரண நாட்களில் 2 லட்சம் மற்றும் விசேஷ நாட்களில் 5 லட்சம் பேர் வருகை தருவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு தினசரி 50,000 பக்தர்கள் வருகை தருகின்றனர்" என்று கூறினர்.
புதிய திட்டங்கள்
3 பாதைகள்
ராமர் கோயில் செல்ல 3 முக்கிய பாதைகள் வகுக்கப்படுகின்றன. ஸ்ரீ ராம் ஜென்மபூமி பாதை (5.77 கிமீ) நயா காட் உடன் சுக்ரீவ் கிலா வழியாக கோயில் இணைக்கப்படுகிறது. பக்தி பாதை (850 மீட்டர்) பிரதான சாலையில் இருந்து ஹனுமான் கர்ஹி வழியாக கோயில் சென்றடைகிறது. ராம் பாதை (12.9 கிமீ) சாதத்கஞ்சை வழியாக கோயில் சென்றடைகிறது. பக்தி பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் ஐந்து மல்டி லெவல் பார்க்கிங் வசதி கட்டடப்பட்டு வருகின்றன.
சாலைகள் & நெடுஞ்சாலைகள்
லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 65 கிமீ வெளிவட்டச் சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் பசுமை களத் திட்டமாக அமைக்கப்படுகிறது. ரூ.2,500 கோடி செலவில், அயோத்தி, கோண்டா, பஸ்தி நான்கு வழிச் சாலை அமைக்கப்படுகிறது.
மத்திய அரசின் நெடுஞ்சாலை திட்டங்களின் ஒரு பகுதியாக ரூ.8,698 கோடி மதிப்பிலான வெளிவட்டச் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினார். 84-கோசி பரிக்ரமா மார்க் வழியாக அயோத்தி, அம்பேத்கர் நகர், பாரபங்கி, கோண்டா மற்றும் பஸ்தி மாவட்டங்களை இணைக்கும் ரூ. 4,000 மதிப்பிலான திட்டம் 2023 இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலை சுமார் 230 கிமீ தூரம் செல்கிறது.
சர்வதேச விமான நிலையம்
கடந்த ஏப்ரல் மாதம், உ.பி.யின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை, லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலைக்கு அருகில் மரியதா புர்ஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் அமைக்க, 318 ஏக்கர் நிலத்தை மாற்றுவதற்கான குத்தகை ஒப்பந்தத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்துடன் கையெழுத்திட்டது.
மாவட்ட நீதிபதி நிதிஷ் குமார் கூறுகையில், 821 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்படுகிறது. இதில், 793 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு முதற்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றார். இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், முதற்கட்டமாக ரூ.100 கோடி செலவில் 2,200 மீட்டர் ஓடுபாதை உருவாக்கப்படும் என்றார்.
அயோத்தி தாம் ரயில் நிலையம்
அயோத்தி தாம் ரயில் நிலையம் இந்த ஆண்டு டிசம்பரில் மூன்று புதிய நடைமேடைகளுடன் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இரண்டாவது கட்டத்தில் மேலும் ஒரு ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
'நவ் அயோத்தி' குடியிருப்பு
உ.பி வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் சார்பில் 1,200 ஏக்கர் பரப்பளவில் "நவ் அயோத்தி" குடியிருப்பு கட்டப்படுகிறது.
மாநில விருந்தினர் மாளிகையாக செயல்பட உள்ளது.
சரயு நதியில் கப்பல் பயணம்
சரயு நதியில் கப்பல் பயணம் தொடங்கப்பட உள்ளது. நயா காட் முதல் குப்தர் காட் வரையிலான 9 கி.மீ தூரத்தில் இரட்டை அடுக்கு சூரிய சக்தியில் இயங்கும் சொகுசு கப்பல் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் குமார் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.