பீகாரில் பெண்கள் காப்பகத்தில் தங்கிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் அரசின் நிதியுதவியில் பெண்கள் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கடந்த மே மாதம் டாடா இன்ஸ்டியூட் ஆப் சோசியல் சயின்ஸ் அமைப்பின் சார்பில் மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட்டது.அப்போது அங்கிருந்த சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
இதில்,காப்பகத்தில் தங்கியிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 44 சிறுமிகளில் 21 பேர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து அங்கிருந்த சிறுமிகளை போலீஸார் வேறு இடத்திற்கு மாற்றினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காப்பகத்தில் இருந்த பணியாளர்கள் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது.மேலும், அவர்களுடன் ஒத்துழைக்காத சிறுமி ஒருவரை அவர்கள் அடித்து கொலை செய்த விவகாரமும் வெளிவந்துள்ளது. இதுகுறித்து காப்பக உரிமையாளர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சிறுமி உடல் வீட்டின் வளாகத்தில் புதைத்துள்ளதாக கைதானவர்கள் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளனர்.இதன் காரணமாக தற்போது உடலை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியுள்ளது.