தோற்றது யெச்சூரி அல்ல, அவரது தீர்மானம்தான்! மார்க்சிஸ்ட் கட்சியின் ஜனநாயக வாக்கெடுப்பு

கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக மார்க்சிஸ்ட் கட்சி மேலிடத்திடம் சீதாராம் யெச்சூரி விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின

மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து தீவிரமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் ‘புரிந்துணர்வு’ உருவாக்க  வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வரைவுத் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இதற்கு எதிராக அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தலைமையிலான அணியினர் மற்றொரு தீர்மானம் கொண்டு வந்தனர்.

இந்த தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில், சீதாராம் யெச்சூரி அணியின் தீர்மானம் 55-31 என்று வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.மேலும் 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் எந்த உடன்பாடும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக மார்க்சிஸ்ட் கட்சி மேலிடத்திடம் சீதாராம் யெச்சூரி விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், அவரது ராஜினாமாவை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை.

இருப்பினும், ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டில், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பான இறுதித் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதுகுறித்து யெச்சூரியின் ஆதரவாளர்கள் கூறுகையில், “ஹைதராபாத் மாநாட்டில் தான் ‘உண்மையான போர்’ நடக்க உள்ளது. இப்போது யெச்சூரி சரிந்து இருக்கலாம், ஆனால் அவர் நாட் அவுட்டாக தான் இருக்கிறார்” என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 1975ம் ஆண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதே போன்றதொரு சூழ்நிலையை சந்தித்தது. அப்போது கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பி சுந்தரய்யாவின் தீர்மானம், சிசி.சுந்தரய்யாவால் தோற்கடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போதும் அதேபோன்றதொரு சூழ்நிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொண்டுள்ளது.

எது எப்படி இருந்தாலும் ஒரு கட்சியின் அகில இந்திய தலைமைப் பொறுப்பில் முதல் இடத்தில் உள்ள நிர்வாகியே ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். அதை விவாதித்து முடிவு செய்திருப்பது, இந்திய அரசியல் கட்சிகளில் மார்க்சிஸ்டில் மட்டும் ஜனநாயகம் மிச்சமிருப்பதையே காட்டுகிறது.

அகில இந்திய பொதுச்செயலாளரான சீத்தாராம் யெச்சூரி தனது தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதும், ராஜினாமா செய்ய முன் வந்தது உயர்ந்த ஜனநாயகப் பண்பாடு. பிரகாஷ் காரத் அணியினரும்கூட அதை ஏற்க மறுத்து, அவரை பொதுச்செயலாளராக தொடர வற்புறுத்தியிருப்பது இன்னும் பெருமிதமானது. இதன் மூலமாக, ‘சீதாராம் யெச்சூரி கொண்டு வந்த தீர்மானத்தை மட்டுமே நாங்கள் தோற்கடித்தோம். சீத்தாராம் யெச்சூரியை அல்ல’ என்கிற உயரிய விழுமியத்தை தோழர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close