ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையது சலாவுதீனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்பு, ஹிஸ்புல் முஜாகிதீன். இதன் தலைமை பொறுப்பை வகித்து வருபவர் சையது சலாவுதீன். இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத போரை தொடுக்க பாகிஸ்தான் உதவ வேண்டும் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சலாவுதீன், கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்து பின்னர் ரத்தான சார்க் உச்சி மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்வதாக இருந்த போது, பாகிஸ்தானுக்கு அவர் வருவதை தடுப்பேன் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.
ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே இந்த அமைப்பின் கமாண்டர் புர்ஹான் வானி உள்பட தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டது முதலே அம்மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகின்றனர் என இந்திய அரசும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையது சலாவுதீனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்கும் முன்னர் இந்த அறிவிப்பை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே வரவேற்பு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ் மற்றும் அந்நாட்டு வெளிவிவகாரங்கள் துறைச் செயலர் ரெக்ஸ் டில்லர்ஸன் ஆகியோர் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கான ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சையது சலாவுதீன் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அமெரிக்க குடிமக்கள் சையது சலாவுதீனுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. அமெரிக்காவின் எல்லைக்கு உட்பட்ட சையது சலாவுதீனின் அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்றும் அந்நாடு அறிவித்துள்ளது.
அல்-குவைதா, ஐஎஸ்ஐஎல், ஜெயீஷ் - இ - முகமது, லக்ஷர் - இ - தொய்பா, டி-நிறுவனம் மற்றும் அதனை சார்ந்து இயங்கும் இயக்கங்கள் உள்ளிட்டவைகள் ஏற்கனவே சர்வதேச தீவிரவாத அமைப்பின் பட்டியலில் உள்ளன. இதில், தாவூத் இப்ராஹீமின் நிறுவனமாக கூறப்படும் டி-நிறுவனம் மட்டும் இந்தியாவை அடிப்படையாக கொண்டது. ஆனால், அதற்கு நிதி ஆதாரம் அளித்து உதவியது பாகிஸ்தான். ஏனைய அமைப்புகள் பாகிஸ்தான் உள்பட மற்ற நாடுகளை அடிப்படையாக கொண்டது.