சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு இளம் சாமியாராக உருவெடுத்துள்ளவர் பாகேஷ்வர் பாபா.
26 வயதான இவர் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர். இவரின் இயற்பெயர் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி (Dhirendra Krishna Shastri) ஆகும்.
தீவிர மதப் பற்றாளரான இவர் தற்போது மாநிலத்தில் சர்ச்சையாக வெடித்துள்ளார். இவர் காங்கிரஸ் அரசின் மதம் தொடர்பான நிகழ்வுகள் குறித்து கேள்வியெழுப்புகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் கொள்கையான மதமாற்ற தடை சட்டத்துக்கும் ஆதரவு கோருகிறார். இந்த நிலையில் இவரை முன்னாள் முதலமைச்சர் (பாஜக) ராமன் சிங் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ விகாஷ் உபாத்யாய் ஆகியோர் சென்று ஆசி பெற்றுள்ளனர்.
இதற்கிடையில் கவர்னர் அனுசுயா யூக்கியும் பாகேஷ்வர் பாபாவின் பணிகளை பாராட்டியுள்ளார். இது, காங்கிரஸின் பூபேஷ் பாகல் தலைமையிலான மாநில அரசை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகளும் பாகேஷ்வர் பாபா மீது குற்றச்சாட்டை கூறிவருகின்றன. குறிப்பாக இவர் கிறிஸ்தவர்களை குறிவைத்து தாய் மதம் (ஹர் வாப்ஸி) திரும்புங்கள் என பரப்புரையில் ஈடுபட்டுவருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இம்மாத தொடக்கத்தில் நாராயண்பூர் மாவட்டத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் இடையே மத கலவரம் மூண்டது. அப்போது அமைதியை நிலைநாட்ட தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துங்கள் என மாநில அரசை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பாகேஷ்வர், “நாங்கள் எங்கள் மக்களை தாய் மதம் திரும்புங்கள் எனக் கூறுகிறோம். ஆனால் அவர்கள் பிரச்னை செய்கிறார்கள். கிறிஸ்தவ மிஷனரிகளிடம் கோடிக் கணக்கில் பணம் உள்ளன.
அந்தப் பணத்தை வைத்து அவர்கள் மத மாற்றத்தில் ஈடுபடுகின்றனர். நாங்கள் உயிரோடு இருக்கும் வரை தாய் மதம் திரும்புங்கள் என அழைப்பு விடுப்போம்.
நீங்கள் (ஊடகங்கள்) எங்களை பார்த்து ஆவேசமாக கேள்வி கேட்கிறீர்கள். ஆனால் இதே கேள்வியை பாதிரியாரிடமோ ஒரு மௌலவியிடமோ நீங்கள் கேட்பதில்லை.
நாங்கள் இந்து புலிகள். யாருக்கும் எதற்றும் அஞ்ச மாட்டோம். உண்மையில் நாங்கள் யாரையும் குறி வைக்கவில்லை. இந்துக்கள்தான் குறிவைக்கப்படுகின்றனர். கோடிக்கணக்கான பணத்தை கொட்டி மதமாற்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன” என்றார்.
சாஸ்திரி மத்தியப் பிரதேசத்தின் சத்தாப்பூரை சேர்ந்தவர். இவர் மீது மூடநம்பிக்கை எதிர்ப்பு குழுக்களும் புகார் அளித்துள்ளன.
இந்த நிலையில், மத மாற்றம் தொடர்பான சாஸ்திரியின் கருத்துகளுக்கு பதிலளித்த சத்தீஸ்கர் கிறிஸ்டியன் ஃபோரம் தலைவர் அருண் பன்னாலால், “கிறிஸ்தவர்களுக்கு வகுப்புவாத நிறத்தை கொடுக்க சாஸ்திரி முயற்சிக்கிறார். எங்களுடைய சமூகம் உட்பட ஒவ்வொரு சமூகத்திலும் இதுபோன்ற ஆள்கள் உள்ளன.
ஆனால் நமது மதத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இயேசு இவ்வாறு போதிக்கவில்லை. ஆனால் சாஸ்திரி மதத்தை கேடயமாக பயன்படுத்தி பரப்புரை செய்கிறார்.
நமது அரசியல் சாசனம் அறிவியல் மனோபாவம் பற்றி பேசுகிறது. எனவே, நான் குணப்படுத்துவேன் என்று யாராவது கிளம்பினால், அவர்களை மாநில அரசு கைது செய்யலாம். அதற்கு நமது சட்டத்தில் இடம் உண்டு” என்றார்.
இந்த நிலையில், ராய்ப்பூருக்கு சாஸ்திரி வந்தது குறித்து கேட்டதற்கு, முதலமைச்சர் பாகேல், “தியானத்தில் துறவிகள் பல சாதனைகளை புரிந்துள்ளார்கள்.
ஆனால் நீங்கள் மந்திரத்தை காட்டக்கூடாது. ஏனெனில் இது மந்திரவாதிகளின் வேலை. மேலும், மந்திரம் தவிர்க்கப்பட வேண்டும்.
முஸ்லீம் சமூகங்களில், மத குருமார்கள் தாயத்து கொடுக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் சபை நடத்துகிறார்கள். இந்த மாயாஜாலங்களால் சமூகத்தில் மந்தநிலை உருவாகிறது” என்றார்.
இது தொடர்பாக பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் சுஷில் குமார் சுக்லா, “அனைத்து மதங்களையும் மதிப்பது போல் ஒருவரின் நடவடிக்கை இருத்தல் வேண்டும். அவர் தாய் மதம் திரும்புங்கள் என பரப்புரை செய்ய விரும்பினால் அது சட்டத்துக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.
பாஜகவின் மத மாற்ற குற்றச்சாட்டுகளில் உண்மை கண்டறியப்பட்டு சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெளிவுப்படுத்தி உள்ளார்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.