குஜராத் மாநிலத்தில் பாஜக தனது வெற்றியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி மிகவும் நெருக்கமான போட்டியை கொடுத்திருக்கிறது. எனினும், இந்த தேர்தலிலிருந்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் உள்ளன.
நகர்ப்புறங்களில் கவனம் தேவை:
கடந்த 2012-ஆம் ஆண்டு குஜராத் தேர்தலில் காங்கிரஸ் அகமதாபாத்தில் மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் வெறும் நான்கு தொகுதிகளை கைப்பற்றியது. வதோதராவில் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. சூரத்தில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் ஒரேயொரு இடத்தில் வெற்றிபெற்றது. மொத்தமாக, வெற்றிபெற்ற 61 தொகுதிகளில், 55 தொகுதிகள் கிராமப்புறங்களை சேர்ந்தவர். இந்த தேர்தலில் மொத்தமாக வெற்றிபெற்றுள்ள தொகுதிகள் அதிகரித்திருக்கிறது என்றாலும், நகர்புறங்களில் அதிக வாக்குகலை பெற காங்கிரஸ் தவறிவிட்டது. ராகுல்காந்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாக இயங்கினாலும், நகர்ப்புற வாக்காளர்களை கவர முடியவில்லை. இதனால், நகர்ப்புறங்களில் காங்கிரஸ் தனது இருப்பை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
கூட்டணியின் முக்கியத்துவம்:
மத ரீதியாக வெற்றி காண பாஜக எவ்வளவோ முயன்றும் அது பலனளிக்கவில்லை. குறிப்பாக, பத்திதார் மற்றும் தலித் இன மக்களை பிரித்து பாஜக வெற்றி காண நினைத்தது. பல இடங்களில் பாஜக மயிரிழையில் வெற்றி கண்டது. அப்படியிருக்கையில், பகுஜன் சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்தால் சிறிய மாற்றத்தை காங்கிரஸால் நிகழ்த்தியிருக்க முடியும். பாஜகவின் மேலாதிக்கத்தை முறியடிக்க காங்கிரஸ் கட்சிக்கு வலுவான கூட்டணி தேவை.
\
தலைமைக்கான வெற்றிடம்:
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கென சரியான தலைமை இல்லை. பிரதமர் நரேந்திரமோடி குஜராத்தி மொழியில் பேசி மக்களிடம் மிகவும் எளிதாக சென்றடைகிறார். ஆனால், ராகுலுக்கு பிராந்திய மொழிகளால் பேச முடியவில்லை. குஜராத்தில் 38.9 சதவீதம் வாக்கு வங்கியை வைத்துள்ள காங்கிரஸ் கட்சியால் இத்தனை ஆண்டுகளில் பலமான தலைவரை உருவாக்க முடியவில்லை. மேற்குவங்கம், ஒடிஷா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் இந்த பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.
அமைப்பு ரீதியான சவால்:
ராகுல்காந்தி குஜராத்தில் 17 நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், அடிமட்ட அளவிலான தேர்தல் பணியை மேற்கொண்டு வாக்குகளை பெற காங்கிரஸ் தவறிவிட்டது. ஆனால், பாஜக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவிலும் மக்களின் ஆதரவை திரட்டுகிறது. ஒவ்வொரு அமைப்பிலும் தொண்டர்கள் பணியாற்றி மக்களிடம் நேரடியாக தொடர்புகொள்ள வேண்டும்.
போட்டியை எதிர்கொள்ளல்:
ராகுல்காந்தியின் பிரச்சாரம் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளித்துள்ளது. இது, ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்களில் எதிரொலிக்கும். குஜராத்தில் காங்கிரஸ் தோற்றாலும், எதிர்பார்த்ததை விட கணிசமான இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. இது, பாஜகவுக்கு பயத்தை அளித்திருக்கும். இந்த தோல்வியும் காங்கிரஸ் கட்சிக்கு பலத்தை ஏற்படுத்தும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.