கேரள சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான ஆளுநர் உரையில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிரான பகுதிகளை நீக்கி, ஆளுநர் சதாசிவம் பேசாமல் தவிர்த்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மத்திய அரசை திருப்திப்படுத்த ஆளுநர் இவ்வாறு செய்ததாக கேரள அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், நீக்கப்பட்ட குறிப்பிட்ட கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் உணர்வையும் புண்படுத்துபவை என்பதால் அக்கட்சியையும் ஆளுநர் திருப்திப்படுத்த இவ்வாறு செய்ததாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தான் விரும்பியதை பேசும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது எனவும், சிபிஎம் கட்சி அதனை அரசியலாக்க முயற்சிப்பதாகவும் கேரள பாஜக விளக்கம் அளித்துள்ளது.
கேரள அரசால் தயாரிக்கப்பட்ட அந்த உரையில் ஆளுநர் சதாசிவம் பேசாமல் தவிர்க்கப்பட்டதாக கூறப்படும் வரிகள்தாம் இவை:
”சில வகுப்புவாத அமைப்புகளால் ஏற்பட்ட கலவரங்களை தவிர மாநிலத்தில் வேறு எந்த கலவர சம்பவங்களும் நடைபெறவில்லை” என்ற இந்த வரியில், சதாசிவம் “சில வகுப்புவாத அமைப்புகள்”, என்ற வரியை தவிர்த்துவிட்டதாக கேரள அரசு குற்றம்சாட்டுகிறது. அதேபோல், “கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் நேரடியாக மாவட்ட மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துதல் உள்ளிட்ட மத்திய அரசின் செயல்பாடுகளால் கேரள அரசு அமைதியை இழந்திருக்கிறது.”, என்ற வரிகளை ஆளுநர் சதாசிவம் முழுமையும் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிரான கருத்துகளை சதாசிவம் சட்டப்பேரவையில் பேசியுள்ளார். அந்த வரிகள், ”பொருத்தமற்ற முறையிலும், நேரத்திலும் செயல்படுத்தப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால், பொருளாதார மந்தநிலைமை மற்றும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன.”
கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, பாஜக-ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சியினரிடையே அரசியல் கொலைகள் நிகழ்கின்றன. இதுவரை இத்தகைய சம்பவங்களால் பாஜக-ஆஎஸ்எஸ் அமைப்பை சேர்ந்த 11 பேரும், சிபிஎம் கட்சியை சேர்ந்த 4 பேரும் என மொத்தம் 15 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதனால், பாஜக-சிபிஎம் கட்சியினரிடையே இதுகுறித்து கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இத்தகையை கொலைகளைக் கண்டித்து சிபிஎம்-க்கு எதிராக, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பேரணி நடத்தினர்.
ஆளுநர் உரை சர்ச்சை குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தனக்கு அதுகுறித்து ஏதும் தெரியாது என கூறியுள்ளார்.
இதனிடையே ஆளுநர் தனது உரையில், கேரளாவில் வெளிமாநிலங்களிலிருந்து வந்து பணிபுரிபவர்களுக்கான பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு குறித்தும் பேசினார்.