செல்போன் பறிமுதல் செய்ததால் கோபமடைந்த மாணவன் பள்ளி முதல்வரை மிரட்டும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் பாலக்காட்டில் உள்ள அரசுப் பள்ளியில் இச்சம்பவம் நடந்தாக கூறப்படுகிறது.
பள்ளிக்கு மாணவன் செல்போன் கொண்டு வந்த நிலையில் பள்ளி முதல்வர் அதை பறிமுதல் செய்த நிலையில் அதை திருப்பித் தரக் கோரி அம்மாணவன் முதல்வரை மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி புதன்கிழமை உத்தரவிட்டார்.
"பள்ளியில் மொபைல் போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மாணவர் ஒருவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. போன் பறிமுதல் செய்யப்பட்டதால் மாணவர் எதிர்பாராத விதமாக நடந்து கொண்டுள்ளார். அதே நேரத்தில், இது பள்ளி தொடர்புடைய தனிப்பட்ட விஷயம் இந்த வீடியோ எப்படி வெளியானது எனத் தெரியவில்லை'' என்றார்.
மேலும் கூறிய அமைச்சர், “மாணவர்கள் பல்வேறு காரணிகளால் மன அழுத்தத்தில் இருக்கலாம். இத்தகைய பிரச்சினைகளுக்கு சமூக தலையீடு தேவை. இந்த வயதில் மாணவர்கள் பள்ளிகளிலும் சமூகத்திலும் தங்களது கருத்தை வெளிப்படுத்த தேவையான வாய்ப்புகளை பெறுகிறார்களா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவரின் உணர்ச்சிகரமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு, பள்ளி அமைப்பினுள் வழிகாட்டுதல் திட்டத்தின் அவசியத்தை இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பள்ளி முதல்வர் கூறுகையில், “ அந்த மாணவர் இன்று மன்னிப்பு கேட்டுள்ளார், அவருக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்துள்ளோம். பல பெற்றோர்கள் மொபைல் போன்கள் குறித்து புகார் கூறுகின்றனர், எனவே, நாங்கள் தலையிட்டு பறிமுதல் செய்தோம். மாணவர் பள்ளியில் எந்தப் நடவடிக்கையும் சந்திக்க மாட்டார். உணர்ச்சிப் பெருக்கில் அவர் இவ்வாறு செய்து விட்டார்” என்று முதல்வர் கூறினார்.