அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) அலுவலக குறிப்பேடு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் எந்தவொரு விழாவிற்கும் “உயர் பிரமுகர்களின்” அழைப்புகள் நிறுவனத்தின் தலைவரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எய்ம்ஸ் இணையதளம், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நிறுவன அமைப்பின் தலைவராக பட்டியலிட்டுள்ளது.
“புது தில்லி, எய்ம்ஸின் தலைவருக்கு தெரியாமலேயே உயர் பிரமுகர்களுக்கு விழாக்களுக்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்படுவது தகுதியான அதிகாரியின் கவனத்திற்கு வந்துள்ளது. அத்தகைய அழைப்பிதழ்கள் எய்ம்ஸ், புது தில்லியின் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே, புது தில்லி எய்ம்ஸ் இயக்குநர் மூலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று தலைமை நிர்வாக அதிகாரி, தியோ நாத் சாஹ் வெளியிட்ட அக்டோபர் 1 தேதியிட்ட குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: காலிஸ்தான் பிரிவினைவாதிக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீஸ்; இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த இண்டர்போல்
இந்த உத்தரவு அனைத்து கல்வித்துறை, ஆராய்ச்சி மற்றும் தேர்வு துறைகளின் முதல்வர்கள், மையங்களின் தலைவர்கள், மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டது.
அதிகாரியான பி.ஆர்.ஓ டாக்டர் கரண் மதனை தொடர்பு கொண்டபோது, இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
“எந்தவொரு குழப்பத்தையும் அல்லது ஏதேனும் விரும்பத்தகாத சூழ்நிலைகளையும் தவிர்க்க தலைவரின் கவனத்தில் இவை இருக்க வேண்டும்” என்று ஒரு அதிகாரி கூறினார்.
எய்ம்ஸ் 1956 இல் பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஒரு தன்னாட்சி நிறுவனமாக அமைக்கப்பட்டது.
அடையாளம் வெளிப்படுத்த விரும்பாத எய்ம்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரின் கூற்றுப்படி, ஜனாதிபதியின் ஒப்புதல் பட்டமளிப்பு போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. “எனது பதவிக்காலத்தில் இது போன்ற எழுத்துப்பூர்வ உத்தரவு எதுவும் இல்லை… ஒருவருக்கு விருது வழங்கப்பட வேண்டிய பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் பிரதமர் அல்லது குடியரசுத் தலைவர் அல்லது வி.வி.ஐ.பி. கலந்துக்கொள்ளும் பிற முக்கிய விழாக்களுக்கு மட்டுமே நாங்கள் தலைவரின் ஒப்புதலைப் பெறுவோம், வேறு எந்த சாதாரண நிகழ்ச்சிக்கும் அல்ல,” என்று அவர் கூறினார்.
மேலும், “வெளிநாட்டு பிரமுகர்களை அழைப்பதற்கு, பொதுவாக இயக்குனர் தான் பல்வேறு துறைகளுக்கு அனுமதி வழங்குகிறார்… பட்டமளிப்பு மற்றும் சர்வதேச மாநாடுகளுக்கு, தலைவர் அலுவலகம், அதாவது சுகாதார அமைச்சகம் மூலம் அரசாங்கத்தின் முன் அனுமதி பெறப்படுகிறது,” என்றும் அந்த முன்னாள் இயக்குனர் கூறினார்.
மற்றொரு முன்னாள் இயக்குநரான டாக்டர் எம்.சி.மிஸ்ரா, பாதுகாப்பு நோக்கங்களுக்காக தலைவரிடம் ஒப்புதல் பெறுவதில் எந்தத் தீங்கும் இல்லை என்றார். “இதுபோன்ற எழுத்துப்பூர்வ உத்தரவு இதற்கு முன்பு இல்லை, ஆனால் உயர்மட்ட பிரமுகர் ஒருவர் அழைக்கப்பட்டால், பாதுகாப்பு நோக்கங்களுக்காக தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஒரு அமைப்பு நடைமுறையில் இருப்பதற்கு இது தேவைப்படுகிறது,” என்றார் டாக்டர் மிஸ்ரா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil