புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிள்ளைச்சாவடி, பெரியக்காலாப்பட்டு, சின்னகாலப்பட்டு மற்றும் கணபதிச்செட்டிகுளம் மீனவ பகுதியில் அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் உள்ளே புகுந்து மீனவர்க ளின் படகுகள், வீடுகள் சொத்துகள் பாதிப்படைந்து வருகின்றன.
அடுத்த மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்ய உள்ள கனமழை கடலில் ஏற்படும் புயல் உள்ளிட்ட சீற்றங்களால் மீனவ கிராம பகுதி முற்றிலும் அழியும் நிலை ஏற்படும் என்பதால் உடனடியாக புதுச்சேரி அரசும் மத்திய அரசும் மீனவ பகுதியில் தூண்டில் வளைவை அமைத்து மீனவ கிராமங்களை காப்பாற்ற வேண்டுமென அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த நிலையில் காலாப்பட்டு பகுதியில் 4 மீனவ கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் .
மீனவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் அமைச்சர் ஷாஜகான் போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
முன்னதாக, அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக கூறியதால் பாதுகாப்பு கருதி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளுடன் தயார் நிலையில் இருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“