காங்கிரஸுக்கு பின்னடைவாக, கர்நாடக மேல் சபையில் பெரும்பான்மையைப் பெற்றுள்ள பா.ஜ.க - ஜே.டி.எஸ் எதிர்க்கட்சிகள், மாநிலத்தில் உள்ள கோவில்களை நிர்வகிப்பதற்கான பொது நிதியை அதிகரிக்க அரசாங்கம் கொண்டு வந்த கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலையத் துறை (திருத்த) மசோதா, 2024ஐ தோற்கடித்தது.
ஆங்கிலத்தில் படிக்க: In setback for Congress, BJP-JDS Opposition defeats Karnataka temple management bill in Legislative Council
காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மை பெற்றுள்ள சட்டப்பேரவையில் பிப்ரவரி 19ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு, பிப்ரவரி 22ஆம் தேதி நிறைவேற்றப்பட்டதில் இருந்து பா.ஜ.கவால் எதிர்க்கப்பட்ட மசோதா, அரசாங்கம் மாற்றங்களை முன்வைத்த போதும், துணைத் தலைவர் எம்.கே.பிரனேஷ் வாக்கெடுப்புக்கு விடப்பட்டதை அடுத்து, வெள்ளிக்கிழமை மேலவையில் தோற்கடிக்கப்பட்டது.
75 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில் பா.ஜ.க – ஜே.டி.எஸ் கூட்டணிக்கு தெளிவான பெரும்பான்மை உள்ளது. பா.ஜ.க 34 உறுப்பினர்கள், காங்கிரஸ் 30, ஜே.டி.எஸ் 8, 1 சுயேச்சை, தலைவர் மற்றும் ஒரு காலியிடம் உள்ளது. 224 உறுப்பினர்களில் 135 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸால் இந்த மசோதா முன்பு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய துறை (திருத்தம்) சட்டம், 2024, மாநிலத்திலுள்ள 35,000க்கும் மேற்பட்ட கோயில்களின் பராமரிப்பு மற்றும் சமூக-மதப் பணிகளுக்காக அரசாங்கத்திடம் இருக்கும் “பொது நிதியின் அளவை மேம்படுத்துவதை” முக்கியமாக நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மசோதா, "மொத்த ஆண்டு வருமானம் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள கோவில்களின் நிகர வருமானத்தில் பத்து சதவிகிதம்" என ஏற்கனவே இருந்ததற்கு பதிலாக, "ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள நிறுவனங்களின் மொத்த வருமானத்தில் பத்து சதவீதத்தை" கோவில்களை பராமரிக்கும் பொது நிதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூடுதலாக, திருத்தப்பட்ட சட்டம், "மொத்த ஆண்டு வருமானம் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் ஆனால் பத்து லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் நிறுவனங்களின் நிகர வருமானத்தில் ஐந்து சதவிகிதம்" என ஏற்கனவே இருந்ததற்குப் பதிலாக, "மொத்த ஆண்டு வருமானம் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் ஆனால் ஒரு கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் நிறுவனங்களின் நிகர வருமானத்தில் ஐந்து சதவீதத்தை" பொதுத் தொகுப்பிற்கு அர்ப்பணிக்கிறது.
இச்சட்டத்தில் மாற்றப்பட்டதன் மூலம், மாநில முஸ்ராய் (அறநிலைய) துறையின் கீழ் உள்ள 35,000 கோயில்களை நிர்வகிக்க ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ள 87 கோயில்கள் மற்றும் ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள 311 கோயில்கள் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.60 கோடி வருவாய் கிடைக்கும்.
அதிக வருமானம் உள்ள கோயில்களின் வருமானத்தில் 10 சதவீதத்தை பொதுத் தொகுப்புக்கு மாற்றும் நடவடிக்கைக்கும், கோயில் கமிட்டிகள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக கோயில் கமிட்டிகளுக்குத் தலைவர்களை நியமிக்கும் முன்மொழிவுக்கும் சட்ட மேலவையின் பா.ஜ.க தலைவர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி எதிர்ப்பு தெரிவித்தார்.
கோவில் கமிட்டிகளுக்கு தலைவர்களை நியமிக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து மசோதாவில் மாற்றம் கொண்டு வர அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி முன்வந்தார். ஆனால், பா.ஜ.க,வைச் சேர்ந்த துணைத் தலைவர் பிரனேஷ், தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக்கூறி அந்த வாய்ப்பை நிராகரித்தார். ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர் மசோதாவை வாக்களிப்புக்குக் கொண்டு சென்றார்.
அதிக வருமானம் ஈட்டும் கோயில்களின் வருமானத்தில் குறுக்கு மானியம் மூலம் கோயில்களுக்கு பொதுவான நிதியை உருவாக்கும் சட்டம் 1997 முதல் நடைமுறையில் இருந்தாலும், கோயில்களின் நிதியைக் கொள்ளையடிக்கும் காங்கிரஸின் முயற்சி என்று பா.ஜ.க கூறியுள்ளது.
அதேநேரம், பா.ஜ.க 2011 இல் கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய துறைச் சட்டம், 1997 இல் திருத்தங்களை அறிமுகப்படுத்தியது, இது "மொத்த ஆண்டு வருமானம் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள நிறுவனங்களின் நிகர வருமானத்தில் பத்து சதவிகிதம்" மற்றும் " மொத்த ஆண்டு வருமானம் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் ஆனால் பத்து லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் நிறுவனங்களின் நிகர வருமானத்தில் ஐந்து சதவிகிதம்" கோவில்களை நிர்வகிப்பதற்கான மத்திய நிதித் தொகுப்பிற்கு மாற்றப்படும்,” என்று குறிப்பிடுகிறது.
கர்நாடகாவில், தற்போது, 34,563 கோவில்கள், மூன்று தனித்தனி பிரிவுகளின் கீழ், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. 2022 ஆம் ஆண்டின் அரசாங்கத் தரவுகளின்படி, மாநிலத்தில் அறநிலையத் துறையின் கீழ் உள்ள 205 கோயில்கள் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் அல்லது அதற்கு மேல் வருமானம் ஈட்டுகின்றன, 139 கோயில்கள் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுகின்றன, மேலும் 34,219 கோயில்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டுகின்றன.
”பொதுத் தொகுப்பு நிதியின் கீழ் தற்போது ஆண்டுக்கு ரூ.8 கோடி மட்டுமே வசூலிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது பொருளாதாரத்தில் நலிவடைந்த குரூப் சி கோயில்களுக்கும், அர்ச்சகர்கள் மற்றும் கோயில் ஊழியர்களின் சம்பளத்திற்கு போதியதாக இல்லை. 34,165 ‘சி’ கிரேடு கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் கோயில் ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறினார்.
ராஜ்ய தர்மிகா பரிஷத்தின் பொது நிதிகள் இந்து மத நிறுவனங்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் பொதுத் தொகுப்பை அதிகரிப்பதற்கான முன்மொழிவை எதிர்க்கும் பா.ஜ.க கூறுவது போல் மற்றவற்றுக்காக அல்ல, என்று அமைச்சர் கூறினார்.
“கோயில்களுக்கான நிதியை அரசு தனது பட்ஜெட்டில் வழங்க வேண்டும். அரசு ஏற்கனவே பட்ஜெட்டில் தஸ்டிக் தொகையை வழங்குகிறது, பட்ஜெட் மூலம் அர்ச்சகர்களின் நலனைக் கவனிக்க முடியும். கோவில்களின் செலவுகளை பூர்த்தி செய்த பிறகு, கோவில்களின் வருவாயில் 10 சதவீதத்தை எடுக்க அரசு பரிசீலிக்கலாம்,'' என, முன்மொழியப்பட்ட மசோதாவுக்கு எதிராக, பா.ஜ.க, தலைவரும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான ஸ்ரீனிவாஸ் கோட்டா பூஜாரி, மேல் சபையில் வாதிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.