scorecardresearch

லேசான கொரோனாவை குணப்படுத்தும் இந்திய மருந்து; முதற்கட்ட ஆய்வில் நம்பிக்கை

In the works: India-made drug to cure mild Covid: கொரோனாவை குணப்படுத்தும் இந்தியாவின் முதல் உள்நாட்டு மருந்து; குறைந்தபட்சம் லேசான மற்றும் மிதமான பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பலனளிக்கும்.

லேசான கொரோனாவை குணப்படுத்தும் இந்திய மருந்து; முதற்கட்ட ஆய்வில் நம்பிக்கை

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் அருகே ஒரு சிறிய பயோ சயின்ஸ் நிறுவனம் ஒரு புதிய மருந்தை பரிசோதித்து வருகிறது. அந்த மருந்து கொரோனாவை குணப்படுத்தும் இந்தியாவின் முதல் உள்நாட்டு மருந்தாக இருக்கும். இது குறைந்தபட்சம் லேசான மற்றும் மிதமான பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பலனளிக்கும்.

ஆரம்பகட்ட சோதனைகளில், மருந்து 72-90 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்துவதாகவும், அதன்பிறகு செய்யப்படும் ஆர்டி-பிசிஆர் சோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியாவதாகவும் நிறுவன அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர். இந்த மருந்து தற்போது முதல் கட்ட மனித பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளது, இது இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது.

நான்கு வருடங்களாக செயல்பட்டு வடும் ஐசெரா பயாலஜிக்கல், பாம்பு கடி, ரேபிஸ் மற்றும் டிப்தீரியாவுக்கான ஆண்டிசெரம் தயாரிப்பில் முக்கியமாக ஈடுபட்டுள்ளது. தற்போது இந்த நிறுவனம், தடுப்பூசி உற்பத்தியாளர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) யின் சிறிய உதவியுடன், ஒரு சக்திவாய்ந்த கொரோனா ஆன்டிபாடிகள் காக்டெய்லை உருவாக்கியுள்ளது. இந்த காக்டெய்ல், லேசான அல்லது மிதமான கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிக்கு அளிக்கப்படும் போது, ​​உடலில் நோய் மேலும் பரவாமல் தடுக்கிறது, மேலும் இருக்கும் வைரஸை நடுநிலையாக்குகிறது.

“இப்போதைக்கு, இது ஒரு நம்பிக்கைக்குரிய மருந்து போல் தெரிகிறது. அதன் அடிப்படை கொள்கைகள் நன்கு நிறுவப்பட்டுள்ளன. மனித சோதனைகளின் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும். பயனுள்ளதாக இருந்தால், அது மிகவும் பொருத்தமான மருந்தாக இருக்கும், குறிப்பாக இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு. கிடைக்கக்கூடிய சில சர்வதேச தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் மலிவு மருந்தாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், ”என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் என்.கே.கங்குலி கூறினார்.

காக்டெய்ல், குறிப்பிட்ட சில கொரோனா நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளைக் கொண்டுள்ளது, அனைத்து புற இரசாயனங்களையும் அகற்ற சுத்திகரிக்கப்படுகிறது. வைரஸிலிருந்து பெறப்பட்ட குறிப்பிட்ட ஆன்டிஜென்களை ஊசி மூலம் குதிரைகளுக்கு செலுத்தப்பட்டு ஆன்டிபாடிகள் உருவாக்கப்படுகின்றன. கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வரும் எஸ்ஐஐ, பாதிக்கப்பட்ட ஹோஸ்டில் ஆன்டிபாடிகள் உற்பத்தியைத் தூண்டும் ரசாயனங்களைக் கொண்ட சரியான ஆன்டிஜென்களைத் தேர்ந்தெடுக்க உதவியது. ஆன்டிபாடிகளின் வளர்ச்சிக்காக குதிரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன, ஏனென்றால் அவை பெரிய விலங்குகளாக இருப்பதால், அவை அதிக அளவு ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்கின்றன என்று ஐசெரா பயாலஜிக்கல்ஸ் இயக்குனர் (புதிய தயாரிப்புகள்) நந்த்குமார் கடம் கூறினார்.

“இந்த செயல்முறை தடுப்பூசி போடுவதைப் போன்றது. குதிரைகளுக்கு குறிப்பிட்ட ஆன்டிஜென்கள் செலுத்தப்படுகின்றன, இதனால் அவை ஆன்டிபாடிகளை உருவாக்க முடியும். இந்த ஆன்டிபாடிகள், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட மனித உடல் உருவாக்கியதைப் போன்றது. ஆன்டிபாடிகள் குதிரைகளிலிருந்து அறுவடை செய்யப்பட்டு பின்னர் மிக உயர்தர சுத்திகரிப்பு செயல்முறை மூலம் சுத்திகரிக்கப்படுகிறது. இறுதி தயாரிப்பு குறைந்தபட்சம் 95 சதவிகிதம் தூய்மையான ஆன்டிபாடிகள் ஆகும், “என்று நந்தக்குமார் கடம் கூறினார்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனாவின் குறிப்பிட்ட ஆன்டிபாடிகளை ஊசி மூலம் போடுவது நோயை எதிர்த்துப் போராட, அவர்களுக்கு உதவ பல்வேறு வழிகளில் முன்னரே முயற்சி செய்யப்பட்டது. ஒரு காலத்தில் உயிரைக் காக்கும் தலையீடாகக் கருதப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை மிகவும் கலவையான முடிவுகளைக் கொண்டுள்ளது. ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. பிளாஸ்மா சிகிச்சையில், குணமடைந்த நோயாளியிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இரத்த பிளாஸ்மாவின் தரம் நபருக்கு நபர் வேறுபடுகிறது. மேலும், இரத்த பிளாஸ்மாவில் ஆன்டிபாடிகள் தவிர வேறு இரசாயனங்கள் உள்ளன, மேலும் இவற்றில் சில, பாதிக்கப்பட்ட நபருக்கு பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

ஐசெராவின் கேண்டிடென்ட் மருந்து என்பது டாக்டர்கள் அறிவுறுத்தியபடி கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் உட்செலுத்தப்படக்கூடிய மிகவும் குறிப்பிட்ட நோய்-எதிர்ப்பு ஆன்டிபாடிகளின் தூய கலவையாகும். இந்த மருந்து, இது போன்ற “மோனோக்ளோனல்” தயாரிப்புகளை விட ஒரு முன்னேற்றமாக இருக்கும், “மோனோக்ளோனல்” மருந்துகளில் குறைந்தது ஒன்று இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது, அது சுவிஸ் மருந்து நிறுவனமான ரோச் உருவாக்கியது.

“பாலிக்ளோனல்” ஆன்டிபாடி கலவையான ஐசெராவின் தயாரிப்பு மோனோக்ளோனல் மாற்றுகளுடன் ஒப்பிடும்போது வைரஸை நடுநிலையாக்கும் அதிக திறன்களைக் கொண்டுள்ளது என்று நந்தக்குமார் கடம் கூறினார். ஆனால் மிக முக்கியமாக, இது எதிர்காலத்தில் வெளிவர இருக்கும் மற்றும் புதிய பிறழ்வுகளுக்கு எதிராக வேலை செய்ய அதிக வாய்ப்புள்ளது.

இதே போன்ற சர்வதேச தயாரிப்புகளை விட இந்த மருந்து பல மடங்கு மலிவானதாக இருக்கும். ஒரு ஊசியின் இறுதிச் செலவு சில ஆயிரம் ரூபாயாக இருக்கலாம் என்று நந்தக்குமார் கடம் கூறினார். எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவரின் உடலை வைரஸ் முழுமையாகப் ஆக்கிரமிக்கும் முன்னர், ​​ஆரம்ப கட்டத்தில் மருந்தை வழங்குவது முக்கியம்.

இந்த நிறுவனம் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் ஒருங்கிணைந்த கட்டம் 2 மற்றும் கட்டம் 3 மருத்துவ பரிசோதனைகளுக்கு திட்டமிட்டுள்ளது, எல்லாம் சரியாக நடந்தால், இந்த ஆண்டின் இறுதிக்குள் இறுதி மருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: In the works india made drug to cure mild covid

Best of Express