நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-ஆம் ஆண்டின் வருமான வரி மசோதாவை மக்களவையில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார். இந்த மசோதாவுக்குப் பதிலாக, புதுப்பிக்கப்பட்ட மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். தேர்வுக்குழுவின் (Select Committee) பரிந்துரைகளை புதிய மசோதாவில் சேர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
புதிய வருமான வரி மசோதா, தேர்வுக்குழு பரிந்துரைத்த பெரும்பாலான திருத்தங்களுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம், அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட மசோதா திங்கட்கிழமை, ஆகஸ்ட் 11 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
வருமான வரி மசோதா ஏன் திரும்பப் பெறப்பட்டது?
"மசோதாவின் பல பதிப்புகள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அனைத்து திருத்தங்களையும் உள்ளடக்கிய ஒரு தெளிவான மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பைச் சமர்ப்பிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதா திங்கட்கிழமை அவையின் பரிசீலனைக்கு வரும்," என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய வருமான வரி மசோதா, ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக கொண்டுவரப்பட உள்ளது. இந்த மசோதா பிப்ரவரி 13-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் ஆய்வுக்குத் தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
வருமான வரி மசோதாவில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் என்ன?
பா.ஜ.க தலைவர் பைஜயந்த் பாண்டா தலைமையில் 31 உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக்குழு, சட்டத்தில் பல மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக, புதிய சட்டத்திலும் மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் பெயர் தெரியாத நன்கொடைகளுக்கு வரி விலக்கு அளிப்பது, மற்றும் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்த பின்னரும், அபராதம் இன்றி TDS ரீஃபண்ட் கோர வரி செலுத்துவோருக்கு அனுமதி வழங்குவது போன்ற பரிந்துரைகள் இதில் அடங்கும்.
புதிய மசோதாவில், முற்றிலும் மத சம்பந்தமான அறக்கட்டளைகளுக்கு வரும் பெயர் தெரியாத நன்கொடைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற தொண்டு நிறுவனங்களையும் உள்ளடக்கிய மத அறக்கட்டளைகளுக்கு வரும் பெயர் தெரியாத நன்கொடைகளுக்கு, சட்டத்தின்படி வரி விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.