பிரபல சர்வதேச ஊடகமான பி.பி.சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஐ.டி அதிகாரிகள் கூறுகையில், இது வரி ஏய்ப்பு விசாரணையின் ஒரு பகுதியாகும். நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்து வருவதாகவும், இந்த ஆய்வு பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக ‘இந்தியா: தி மோடி கேள்விகள்’ என்ற ஆவணப்படத்தை பி.பி.சி வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘இந்தியா: தி மோடி கேள்விகள்’ ஆவணப்படம் இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டது.
அது 2002-ம் நடைபெற்ற குஜராத் கலவரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் போது அப்போதைய குஜராத் முதல்வர் பிரதமர் மோடி மற்றும் அவர் தலைமையிலான அரசு கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. ஆவணப்படம் தொடர்பான சமூக வலைதள லிங்குகளை முடக்க உத்தரவிட்டது. இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை பரப்புவதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரி, பல்கலைகழகங்களில் பி.பி.சி ஆவணப்படம் தடையை மீறி மாணவர்களால் திரையிடப்பட்டது.
இந்நிலையில், பி.பி.சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த ஆவணப்படம் உயர் தரத்துடன் நன்கு ஆய்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்டது” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/