ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் உள்ள வரதய்ய பாளையத்தில், கல்கி பகவான் ஆசிரமம் அமைந்துள்ளது. இதன் கிளைகள் மற்றும் அலுவலகங்கள், தமிழகம், ஆந்திராவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ளன.
கல்கி பகவானை தரிசனம் செய்ய, 5,000 ரூபாய் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கட்டணத்திற்கு, உரிய வருமான வரி செலுத்தவில்லை என கல்கி ஆசிரமத்தின் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்தது.
இதையடுத்து, தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள, கல்கி ஆசிரமம் மற்றும் பகவானின் மகன், என்.கே.வி.கிருஷ்ணாவுக்கு தொடர்புடைய ஹோட்டல்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம் நேமம் கிராமத்தில் உள்ள ஆசிரமம் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 40 குழுக்களாக 250க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.
Kalki Ahsram Raid: கல்கி பகவான் ஆசிரமத்தில் கைப்பற்றியவை
இந்த நிலையில் வருமான வரி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்டுள்ளன என்ற பட்டியலுடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிக்கையை வருமான வரித்துறையின் மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட்டது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்,
40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.43 கோடியே 90 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
வெளிநாட்டு பணம் என்ற வகையில், 2½ மில்லியன் அமெரிக்க டாலர் சிக்கியது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.18 கோடி ஆகும்.
88 கிலோ தங்க கட்டிகள், நகைகள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.26 கோடி.
1,271 காரட் வைரக்கற்கள் சிக்கின. இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி.
கைப்பற்றப்பட்ட ரொக்கம், அமெரிக்க டாலர், தங்கம், வைரம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.93 கோடி ஆகும்.
கணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடிக்கு அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கல்கி பகவான் குழுமம், இந்தியாவில் மட்டுமல்லாது சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கம்பெனிகளில் பெரிய அளவுக்கு முதலீடுகள் செய்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்னும் வருமான வரி சோதனைகள் தொடருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.