நிதி விவகாரங்கள், வருமான வரி குறித்த தகவல்களை, வருமான வரித்துறை ஒருபோதும் வருமான வரி செலுத்துபவர்களிடமிருந்து தனித்தனியாக கேட்பதில்லை. இந்த விபரங்களை கேட்டு வரும் போலி எஸ்எம்எஸ்கள்,இமெயில்கள் மற்றும் அழைப்புகள் உள்ளிட்டவைகளிடமிருந்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
2019-20ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, கடந்த ஆகஸ்ட் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த காலக்கெடுவுக்குள், அனிகா குப்தா என்பவர் வருமானவரி கணக்கை ஆதாருடன் கூடிய ஓடிபி முறையில் கணக்கை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 6ம் தேதி, இவரது பெர்சனல் இமெயில் ஐடிக்கு ஒரு மெயில் வந்துள்ளது. அதில், உங்களது வருமானவரி கணக்கு தாக்கல் 50 சதவீத அளவிலேயே நிறைவடைந்துள்ளது. தாங்கள் இப்போது கேட்கப்படும் விபரங்களை அளித்தால், அது நிறைவுபெற்று விடும் என்று மேலும் படிக்க, மேலும் விபரங்களுக்கு, இ.வெரிபிகேசன் முறைகள் என பல்வேறு லிங்குகள் அதில் இருந்தன.
இதுபோன்ற மெயில், அனிகா குப்தா மட்டுமல்லாது மேலும் பலருக்கு வந்துள்ளது.ரஜட் தியோரா உள்ளிட்ட நபர்களுக்கு வருமான வரித்துறையில் இருந்து அனுப்பப்பட்டது போன்று எஸ்எம்எஸ்களும் வந்துள்ளன. மேலும் பலருக்கு அழைப்புகளும் வந்துள்ளன. இதுபோன்ற இமெயில்கள், எஸ்எம்எஸ்கள், அழைப்புகள் உள்ளிட்டவைகளை, வருமான வரித்துறை ஒருபோதும் அனுப்புவதில்லை. இவைகள் எல்லாம், உங்களது வருமான வரி கணக்கு குறித்த தகவல்களை பெற்று மோசடி செய்ய போலி நிறுவனங்கள் செய்யும் நடவடிக்கைகள் இது என்றும், இவைகளிடமிருந்து மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று வருமான வரித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்காகவே, வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முகப்புப்பக்கத்தில் இந்த விழிப்புணர்வு அறிவிப்பையே வெளியிட்டுள்ளது.