வருமான வரி கணக்கு தாக்கல் ( Income tax returns) செய்ய இன்று ( ஆகஸ்ட் 31ம் தேதி) கடைசி நாள் ஆகும். இதுவரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள், இன்றைக்குள் தாக்கல் செய்யாவிடில், ரூ.10 ஆயிரம் வரை அபராதம் கட்ட நேரிடும் என்று வருமானவரித்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருமானவரி கணக்கை இன்று தாக்கல் செய்ய இருப்பவர்களுக்கான சில முக்கிய குறிப்புகள்
தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருங்கள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன்னர், தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். மாதசம்பளம் பெறுபவர்கள் எனில், படிவம் 16 யை, தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து வாங்கிக்கொள்ளவும். வேறு வேலைக்கு மாற்றலாகி சென்றிருந்தால், கடைசியாக பணிபுரிந்த நிறுவனத்திடம் இருந்து படிவம் 16யை பெற்றிருத்தல் நலம்.
அதேபோல், படிவம் 26ஏஎஸ்யையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள், படிவம் நமது மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வரிகள், அதன் வட்டிவிகிதம் உள்ளிட்ட தகவல்கள், படிவம் 26 ஏஎஸ்ல் குறிப்பிடப்பட்டிருக்கும்.
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன் வரிவிலக்குக்கான சான்றிதழ்களையும், படிவம் 26ஏஎஸ்யையும் ஒப்பிட்டு சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும். இரண்டும் ஒத்திருக்க வேண்டும், மாறுபட்டிருந்தால் கணக்கு தாக்கலில் சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை.
உங்களது மாத சம்பளத்திற்கான வட்டிவிகிதத்தை, சேமிப்பு கணக்கிலோ அல்லது பிக்சட் டெபாசிட்டுகளிலோ சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள். வட்டிவிகிதம், உங்களது சேமிப்பு கணக்கில் சேர்ந்துவிட்டதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.
ஆண்டு சம்பளம், வரி விபரங்கள் கணக்கீடு
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு தேவையான அனைத்து விபரங்களையும் தயாராக வைத்துக்கொண்ட பின்னர், ஆண்டு வருமானம் அதற்கு நாம் கட்ட வேண்டிய வரி விபரங்கள் குறித்து கணக்கீடு மேற்கொள்ள வேண்டும்.
வரிவிலக்கு பெற விரும்புபவர்கள் 80 சி, 80 டி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தேவையான ஆவணங்களை இணைத்து வரிவிலக்குக்கு கோரலாம்.
வருமான வரி கணக்கு தாக்கலுக்கான அனைத்து தகவல்களையும் கொடுத்தபின்னர், கூடுதலாக வரி ஏதாவது கட்டவேண்டியிருப்பின் உடனடியாக கட்டிவிட வேண்டும். ஒருவேளை, நாம் அதிகமாக கட்டியிருந்தால், கூடுதல் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள வழிவகை உள்ளது.
வருமான வரி கணக்கை சரியான முறையில் தாக்கல் செய்ய வேண்டும். அதில் ஏதாவது குறைபாடோ அல்லது தவறாக தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மீண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நேரிடும்.
2018-19ம் நிதியாண்டில், ஆண்டு வருமானம் ரூ.50 லட்சங்களுக்கு உட்பட்டு இருப்பவர்கள், இந்த வருமானம் சம்பளமாகவோ அல்லது ஓய்வு ஊதியமாகவோ, வீடு பேரிலான சொத்து ஆகவோ இந்த வருமானம் இருப்பவர்கள், ITR-1 படிவத்தை நிரப்ப வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளின் மூலமாக வருமானம் பெறுபவர்கள், பங்குவர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் எனில், ITR-2 படிவத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வருமானவரித்துறை ,நடப்பு ஆண்டு முதல் ITR-1,2,3 மற்றும் 4 படிவங்களை வழங்க துவங்கியுள்ளன.
ITR -1 படிவத்தில் சம்பள விபரங்கள், சம்பளத்திற்கு வங்கி அளிக்கும் வட்டிவிகிதம் உள்ளிட்ட விபரங்கள் அடங்கியிருக்கும். இந்த படிவத்தினை http://www.incometaxindiaefiling.gov.in/home என்ற வருமானவரித்துறையின் இணையதளபக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ITR-1 படிவத்தில் வரிவிதிப்பிற்கு உட்பட்ட சம்பளம், சம்பளத்திற்கான வட்டிவிகிதம் உள்ளிட்டவைகளை குறிப்பிடுவதுபோன்று, வரிவிலிக்கு பெறும் பிபிஎப் வட்டி விகிதம், டிவிடெண்ட் வருமானம் உள்ளிட்ட தகவல்களையும் நிரப்பவேண்டும்.
வருமான வரி கணக்கு தாக்கலை சரிபார்த்தல்
இது மிக முக்கியமான நிகழ்வு ஆகும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து 120 நாட்களுக்குள் இந்த நிகழ்வு நடைபெற வேண்டும்.
ஆதார் ஓடிபி மூலமாக சரிபார்க்கலாம்.
நெட் பேங்கிங்கில் ஈவிசி மூலமாக சரிபார்க்கலாம்
ITR - V படிவத்தை சிபிசி பெங்களூரு அலுவலகத்திற்கு அனுப்பியும் சரிபார்க்கலாம்.
சரிபார்க்கப்பட்டாத வருமான வரி கணக்கு தாக்கல் விபரங்கள் ஏற்றுக்கொள்ளப்படாததாக கருதப்பட்டு அவை நிராகரிக்கப்படும். பின்னர் மீண்டும் முதலில் இருந்து வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறைகளை செய்யவேண்டியிருக்கும்.
வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையின்போது வங்கி கணக்கை குறிப்பிட மறந்துவிடாதீர். ஏனெனில் கூடுதலாக செலுத்தப்பட்ட தொகை, ஆதார் மற்றும் பான் எண் இணைக்கப்பட்ட உங்களது வங்கிக்கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் ஏதாவது தவறு நேர்ந்துவிட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலை சேர்க்கேவேண்டுமென்றாலோ அல்லது வரி விலக்குக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்றாலோ, திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்துகொள்ளலாம். திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, 2020 மார்ச் 31ம் தேதி கடைசி நாள் ஆகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.