incumbent bihar government has no muslim legislator : பீகார் மாநிலத்தில் மொத்தம் 16% மக்கள் இஸ்லாமியர்கள். இருப்பினும் ஆளும் கூட்டணிக் கட்சிகளில் ஒரு இஸ்லாமிய எம்.எல்.ஏவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்திற்கு நடைபெற்ற தேர்தல்களில் இவ்வாறான ஒரு நிலை தற்ஓது தான் உருவாகியுள்ளது.
பீகார் மக்கள் தொகையில் 16% இஸ்லாமியர்களும் 15% பேர் யாதவர்களும் இருப்பதால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக அவர்கள் தான் இருக்கிறார்கள். இது நாளில் அவர்கள் வாக்களித்த கட்சிகள் தான் வெற்றியை கொண்டாடியுள்ளன. ஆனால் இம்முறை அவர்களின் வாக்குகளை பெறாத அரசியல் கட்சிகளின் கூட்டணி வெற்றியை பெற்றுள்ளது.
என்.டி.ஏ. கூட்டணியில் பாஜக, ஜே.டி.யு, ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா செக்யுலர் (ஹெச்ஏஎம்) மற்றும் விகாஷீல் இன்ஸான் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்தன. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் மட்டுமே 11 இஸ்லாமியர்கள் போட்டியிட்டனர். ஆனால் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. பாஜக உள்ளிட்ட மற்ற மூன்று கட்சிகளில் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
மேலும் படிக்க : டாக்டர் சிங் இல்லாமல் போனால் என்ன ஆகும்? நினைவுகளை பகிரும் ஒபாமா!
ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) தலைமையில் போட்டியிட்ட மகாகத்பந்தணில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்திருந்தன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெற்றி பெற்ற 75 தொகுதிகளில் 8 இடங்களில் இஸ்லாமியர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸில் 4 இஸ்லாமியர்கள் மற்றும் இடதுசாரிகளில் ஒருவர் என முஸ்லிம்கள் வென்றுள்ளனர். மூன்றாவதாக அமைந்த கூட்டணியில் 6 இஸ்லாமியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். அவர் இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் எம்.பி அசாசுத்தீன் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் போட்டியிட்ட 5 இஸ்லாமியர்களுக்கும் வெற்றி கிடைத்துள்ளது. மொத்தமாக 19 இஸ்லாமியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பீகார் சட்டமன்றம் செல்ல உள்ளனர். ஆனால் ஒருவரும் ஆளும் கட்சியில் இல்லை என்பது தான் வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil