இன்று உச்சநீதிமன்றத்தில் முன்னாள் ஊழியர் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி உட்பட 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. இந்த புகார் குறித்து அந்த பெண் 22 நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
உச்சநீதிமன்றத்தின் எண் 1 நீதிமன்ற அறையில் நடைப்பெற்ற இந்த விசாரணையில் நீதிபதி ரஞ்சன் கோகாய் “இந்த குற்றச்சாட்டு நம்ப முடியாதவை. இந்த குற்றச்சாட்டிற்கு பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது. அவர்கள் உச்சநீதிமன்ற தலைமையை செயலிழக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். ” என்றார்.
முன்னாள் பெண் ஊழியர் குற்றச்சாட்டில் 2 சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார். இந்த 2 சம்பவங்களும் அக்டோபர் 2018 -ல் நடந்தாக கூறப்பட்டுள்ளது.
அந்த பெண் நீதிபதிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை வைத்து பார்க்கையில் புகார்கள் மேலோட்டமாக கூறப்பட்டுள்ளதே தவிர குற்றச்சாட்டிற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று உச்சநீதிமன்ற பொதுச் செயலாளர் சஞ்சீவ் சுதாகர் கல்கவோன்கர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இது முற்றிலும் பொய்.” என கூறினார்.
இதுத் தொடர்பாக நீதிபதி ரஞ்சன் கோகாய் பேசியிருப்பதாவது, “ 20 ஆண்டு கால சுயநலமில்லா சேவையில் உள்ள என் வங்கிக் கணக்கில் 6.80 லட்சம் தொகை மட்டுமே உள்ளது. நீதித்துறை கடுமையான அச்சுறுதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தலுக்கு இடையில் நீதித்துறை சுதந்திரம் இருப்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
பணத்தை வைத்து என்னை கவிழ்க்க முடியாததால், வேறு காரணிகளைக் கண்டுபிடிக்க முயற்சித்து, இதுபோன்ற பொய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 20 ஆண்டுகள் நான் செய்துள்ள சேவைக்கான அங்கீகாரம் இதுதான்.
இதற்கு நான் ஒருபோதும் அஞ்சமாட்டேன். எனது பணிக்காலம் முடியும் வரை நான் நேர்மையாக செயல்படுவேன். அந்த பெண் ஊழியர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.