இந்தியாவில் 533- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் பரவி வருகிறது.
13 மாநிலங்களில்1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 மாநிலங்களில் 50,000 முதல் 1 லட்சம் பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 மாநிலங்களில் 50,000 க்கும் குறைவானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்து உள்ளது.
ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்க்கவா கூறுகையில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளதால், கோவிட் பரிசோதனைகளில் 30 சதவீதத்திற்கு மேல் ரேபிட் ஆண்டிஜன் டெஸ்ட் செய்யக்கூடாது என்ற சுகாதார அமைச்சகத்தின் முந்தைய ஆலோசனையை பின்பற்ற தேவையில்லை. அதற்கு பதிலாக, கிராமப்புறங்களில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் . பள்ளிகள் மற்றும் சமூக மையங்களில் சோதனை மையங்களை அமைத்து ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனையை தீவிரமாக பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
ரேபிட் ஆண்டிஜன் பரிசோதனை சுலபமாக செய்துகொள்ளலாம். முடிவுகளும் விரைவாக தெரிய வரும் . ஆனால் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை போல துல்லியமாக கணக்கிட முடியாது.
தொடர்ந்து பல்ராம் பார்க்கவா கூறுகையில், கொரோனா பரவல் இந்தியாவில் உச்சத்தில் உள்ளது. தேசிய அளவில் கொரேனா பாசிட்டிவ் விகிதம் 20-21 சதவீதமாக உள்ளது. மேலும் நாட்டில் 42 மாவட்டங்களில் கொரோனா பரவல் தேசிய சராசரி விகிதத்தை விட அதிகமாக உள்ளது. ஆரம்ப கால பரிசோதனை, தனிமைப்படுத்துதல் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும். கொரோனா பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் தற்போது உள்ளது. இதனால் கொரோனா இரண்டாவது அலையில், ஆர்டிபிசிஆர் சோதனைகளை விட ஆரம்ப காலத்தில் நோய் தொற்றை கண்டறிவதற்காக ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனையை அதிகரித்துள்ளோம்.
முன்னதாக எங்கள் பரிந்துரை 70 சதவீத ஆர்டி-பி.சி.ஆர் சோதனை மற்றும் 30 சதவீத ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் ஆகும். ஆனால் இப்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் மாநிலங்களை அதிகமான ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம்.இதனால் பரிசோதனை முடிவுகள் விரைவாக கிடைத்து, விரைவாக தனிமைப்படுத்தி, பரவலை தடுக்கலாம்.
ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனைகளை அதிகரிக்க நகரங்கள், கிராமங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், சமூக மையங்களில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய சோதனை மையங்களை அமைத்து ரேபிட் டெஸ்ட்டுக்கான வசதிகளை உருவாக்கி உடனடியாக பரிசோதனையை தொடங்க வேண்டும்.
ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வசதிகள் மட்டுமே உள்ளது. ஒருமுறை ரேபிட் அல்லது RT-PCR சோதனையில் பாசிட்டிவ் வந்தவர்களுக்கு மீண்டும் சோதனை செய்யப்படக்கூடாது. மருத்துவமனையில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களுக்கு எந்த பரிசோதனையும் தேவையில்லை. மாநிலங்களுக்கு இடையே பயணங்களை மேற்கொள்ளும் ஆரோக்கயமான நபர்களுக்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை தேவையில்லை.
வைரஸ் ஆர்.என்.ஏ துகள்களால் ஆனது. ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் ஆர்.என்.ஏவை மட்டுமே கண்டறியும். அறிகுறிகள் மற்றும் தொற்று குறைந்துவிட்ட பிறகும் பல நாட்களுக்கு சோதனை முடிவில் பாசிட்டிவ் என வரலாம். குணமடைந்த நபர்களுக்கு உயிருள்ள வைரஸ் இருக்காது. இதனால் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் போது எந்த பரிசோதனையும் தேவையில்லை என டாக்டர் பார்க்கவா கூறிகிறார்.
5 மாநிலங்களில் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியபிரதேசத்தில் -45 மாவட்டங்கள், உத்தரப்பிரதேசம்- 38 , மகாராஷ்ட்ரா- 36 , தமிழ்நாடு- 34 , பீகார்- 33 மாவட்டங்களிலும் பாதிப்பு பதிவாகியுள்ளது.
8 மாநிலங்களில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 28 மாவட்டங்களிலும், ராஜஸ்தானில் 28 மாவட்டங்களிலும், ஒடிசா 27 மாவட்டங்கள், சத்தீஸ்கர் 24 மாவட்டங்கள், குஜராத்-23 மாவட்டங்கள், ஹரியானா- 22 மாவட்டங்கள், மேற்கு வங்கம்-22 மாவட்டங்கள் மற்றும் அசாமில் 20 மாவட்டங்களில் இந்த பாதிப்பு உள்ளது.
அதேபோல் 8 மாநிலங்களில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கு மேல் கோவிட் பாதிப்பு உள்ளது. ஜார்க்கண்டில் 18 மாவட்டத்திலும், பஞ்சாப்-18 மாவட்டங்கள், கேரளா-14 மாவட்டங்கள், அருணாச்சலப்பிரதேசம் -13 மாவட்டங்கள், ஆந்திர பிரதேசம்-12 மாவட்டங்கள், ஹிமாச்சலப்பிரதேசம்-12 மாவட்டங்கள், உத்தரகாண்ட் -12 மாவட்டங்கள் மற்றும் டெல்லியில் 11 மாவட்டங்களில் இந்த பாதிப்பு பதிவாகிஉள்ளது.
மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலர் லாவ் அகர்வால் கூறுகையில், 10 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என ஏற்கனவே மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுபோன்ற பாதிப்பு அதிகம் உள்ள 533 மாவட்டங்களில் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறினார்.
மத்திய அரசு தெரிவித்துள்ள தகவலின்படி, மே 5-11 தேதிகளுக்குள் 26 மாநிலங்களில் கோவிட் பாதிப்பு15 சதவீதமாக உள்ளது. 6 மாநிலங்களில் 5-15 சதவீதமாக பாசிட்டிவ் விகிதம் உள்ளது. 4 மாநிலங்களில் 5 சதவீதத்திற்கும் குறைவாக கோவிட் பாதிப்பு உள்ளது.
6 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் மிகவும் ஆபத்தான கொரோனா பாசிட்டிவ் விகிதத்தை கொண்டுள்ளது . அதாவது 25 சதவீதத்திற்கும் அதிகமாக என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவை கோவா(49.6 %), புதுச்சேரி(42.8%), மேற்கு வங்கம்(34.4%), ஹரியானா(34.3%), கர்நாடகா(32.4%), ராஜஸ்தான்(30 %), சண்டிகர்(27.5%), ஆந்திரப்பிரதேசம்(26.2%), மற்றும் டெல்லி(25.7%) ஆகிய மாநிலங்கள் ஆகும்.
14 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவை கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப், அசாம், ஜம்மு-காஷ்மீர், கோவா, ஹிமாச்சல் பிரதேசம், புதுச்சேரி, மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவையாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.