/indian-express-tamil/media/media_files/2025/05/11/QEWSSVBjHaR7Ni4SVQ9l.jpg)
பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (PCAA) நேற்று (மே 10) மாலை விமானிகளுக்கு வெளியிட்ட அறிவிப்பின் படி (NOTAM), பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரஹீம் யார் கான் விமானப்படை தளத்தில் இந்தியா நடத்திய ராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து, அதன் ஒரே ஓடுபாதை ஒரு வாரத்திற்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, பாகிஸ்தான் நேரப்படி நேற்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தது. குறைந்தபட்சம் மே 18-ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிட்ட தகவல்களைக் கூறாமல், ஓடுபாதையில் பணிகள் நடைபெற்று வருவதால், அதனை மூடி வைத்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள இந்த முக்கியமான விமானப்படை தளத்தின் தற்காலிக மூடலின் நேரமும், கால அளவும், இந்திய ஏவுகணை மூலம் அந்த தளத்தின் ஓடுபாதை நேரடியாகத் தாக்கப்பட்டது மற்றும் விரிவான பழுதுபார்க்கும் பணிகள் தேவைப்படுகின்றன என்ற அறிக்கைகளுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) படி, ஒரு NOTAM இல் 'WIP' என்ற குறியீட்டைப் பயன்படுத்துவது பணிகள் நடைபெற்று வருவதைக் குறிக்கிறது. அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) படி, 'WIP' என்பது விமான நிலைய மேற்பரப்பில் செய்யப்படும் எந்தவொரு பணியையும் விவரிக்கிறது. NOTAM விமானப்படை தளத்தின் ஓடுபாதையை குறிப்பாகக் குறிப்பிடுவதால், ஓடுபாதையில் பணிகள் நடைபெற்று வருவதையே இது குறிக்கிறது.
ரஹீம் யார் கான் விமானப்படை தளத்தில் ஷேக் சயீத் சர்வதேச விமான நிலையமும் அமைந்துள்ளது. Flightradar24 இல் கிடைக்கும் விமான நிலையத் தரவுகளின்படி, அதன் ஒரே ஓடுபாதை 3,000 மீட்டர் அல்லது 9,843 அடி நீளம் கொண்டது என அறியப்படுகிறது.
நான்கு நாட்கள் நீடித்த ராணுவ மோதலின் போது இந்தியா தாக்கிய பல முக்கிய பாகிஸ்தான் இராணுவ இலக்குகளில் இந்த விமானப்படை தளமும் ஒன்றாகும். நேற்று மாலை இரு அணுசக்தி நாடுகளும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்தன. நேற்றைய தினம் இந்தியா "வான்வழி துல்லிய ஆயுதங்களைப்" பயன்படுத்தி தாக்கிய ஆறு பாகிஸ்தான் ராணுவ இலக்குகளில் இந்த விமானப்படை தளமும் ஒன்றாகும் - ரஃபிகி, முரித், சக்லாலா, சுக்கூர் மற்றும் ஜூனியா ஆகியவை மற்ற ஐந்து இலக்குகள் ஆகும். பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்தியா இந்தத் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் பல இடங்களில் வான்வழி ஊடுருவ முயற்சிகளை மேற்கொண்டது. அவை இந்திய ஆயுதப் படைகளால் முறியடிக்கப்பட்டன.
கடந்த புதன்கிழமை அதிகாலை 'ஆப்ரேஷன் சிந்துர்'-ன் ஒரு பகுதியாக பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்பு இடங்களில் இந்தியா துல்லியத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல தசாப்தங்களில் இல்லாத மிக மோசமான மோதல் வெடித்தது. ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த கொடிய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
புதன்கிழமை அதிகாலை பயங்கரவாத உள்கட்டமைப்பில் இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லை முழுவதும் பாகிஸ்தான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதால் பதற்றம் அதிகரித்தது. இந்தியாவும் பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்து.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.